உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு பரிசீலனையின்போது யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் தேர்தல் அதிகாரி எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க வேண்டும்
உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு பரிசீலனையின்போது யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் தேர்தல் அதிகாரி எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் மதுரை மாநகராட்சி 41–வது வார்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட எனது மனைவி முத்துசுமதி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த வார்டில் அ.தி.மு.க. சார்பில் இந்திராணி வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் 2011–ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டார். அப்போது தேர்தல் செலவு கணக்கை தேர்தல் ஆணையத்தில் அவர் தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே அவரது வேட்புமனுவை ஏற்கக்கூடாது என உதவி தேர்தல் அலுவலரிடம் மனு அளித்தோம். அந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
2011–ல் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு செலவு கணக்கு தாக்கல் செய்யாததால், அடுத்து நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்களின் பட்டியலை வெளியிடுவது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளில் ஒன்றாகும். ஆனால் மாநில தேர்தல் ஆணையம் இதுவரை தேர்தலில் போட்டியிட தகுதியில்லாதவர்கள் பட்டியலை வெளியிடவில்லை.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுதொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பார்க்கலாம் என தெரிவித்தனர். ஆனால் அதுபோன்ற பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் பட்டியலை வெளியிடும்போது, தகுதியற்றவர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும். அந்த அடிப்படையில் வருகிற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை ஏற்கனவே நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் விசாரித்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று பிறப்பிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:–
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யும்போது யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அதனை எழுத்துப்பூர்வமாக பெற வேண்டும். அதற்கு உள்ளாட்சி தேர்தல் அதிகாரி எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க வேண்டும். இதுதொடர்பாக வேட்பு மனு பரிசீலனை குறித்த விதிமுறை மற்றும் வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்து அதனை இனிவரும் உள்ளாட்சி தேர்தல் முதல் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.