4–ம் மண்டல பாசனத்தில் 3–வது சுற்றுக்கு தண்ணீர் திறக்க கோரி பி.ஏ.பி. அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
4–ம் மண்டல பாசனத்தில் 3–வது சுற்றுக்கு தண்ணீர் திறக்க கோரி பி.ஏ.பி. அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
பொள்ளாச்சி,
திருமூர்த்தி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 4–ம் மண்டல பாசனத்தில் 2 சுற்று தண்ணீர் வழங்கப்பட்டது. இதை நம்பி விவசாயிகள் மக்காசோளம், காய்கறிகள் மற்றும் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்தனர். தற்போது மக்கசோளம் அறுவடைக்கு வரும் நிலையில் தண்ணீர் இல்லாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் 4–ம் மண்டல பாசனத்தில் கூடுதலாக ஒரு சுற்று தண்ணீர் திறக்ககோரி பொள்ளாச்சி பி.ஏ.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட விவசாயிகள் இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதுகுறித்து 4–ம் மண்டல பாசன விவசாயிகள் கூறியதாவது:–
4–ம் மண்டல பாசனத்தில் முதல் 2 சுற்று தண்ணீர் வழங்கப்பட்டது. இதனால் சுமார் 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. இதை நம்பி மக்காசோளம் உள்பட அதிகப்படியான பயிர்களை சாகுபடி செய்தோம். மழை குறைவாக பெய்ததால் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் விளையும் தருவாயில் உள்ள பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இனி ஒரு சுற்று தண்ணீர் கூடுதலாக வழங்கினால் மட்டுமே மக்காசோளம் மகசூல் பெற முடியும்.
எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தண்ணீர் வழங்க வேண்டும். நாளை மறுநாள் (18–ந்தேதி) உரிய தீர்வு ஏற்படவில்லை என்றால், கோவையில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகத்தை 5 ஆயிரம் விவசாயிகளை திரட்டி முற்றுகையிடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.