திருப்பூரில், அரசு பணிமனையில் நடந்த போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்

திருப்பூரில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் 2–வது நாளாக நேற்று நடந்தது.

Update: 2017-12-15 22:45 GMT

திருப்பூர்,

திருப்பூரில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் 2–வது நாளாக நேற்று நடந்தது. மாலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். இல்லையென்றால் பிற பொதுத்துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதை போன்று ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போதே அவர்களுக்கான பணப்பலன்களையும் சேர்த்து வழங்க வேண்டும்.

இலவச பஸ் பாஸ் மூலம் பயணம் செய்யும் மாணவ–மாணவிகள், மூத்த குடிமக்கள் மற்றும் இதர சலுகைகளால் பஸ்களில் பயணம் செய்யும்போது ஏற்படும் வருமான இழப்பை சரி செய்ய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நேற்று முன்தினம் காலை தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொழிலாளர்கள் பணிமனை வளாகத்திலேயே தங்கினர். அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டார்கள்.

நேற்று காலை 2–வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு எல்.பி.எப். சங்கத்தின் மண்டல பொதுச்செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மண்டல தலைவர் சுப்பிரமணியம், ஏ.ஐ.டி.யு.சி. மண்டல பொதுச்செயலாளர் சண்முகம், டி.டி.எஸ்.எப். மண்டல பொதுச்செயலாளர் பெரியசாமி, ஏ.ஏ.எல்.எப். துணை பொதுச்செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தின் போது முக்கிய நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். திருப்பூர் மண்டலத்துக்கு உட்பட்ட திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கேயம், உடுமலை, பழனி ஆகிய இடங்களில் உள்ள 8 பணிமனைகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன்காரணமாக திருப்பூரில் உள்ள இரண்டு பணிமனைகளில் 40 சதவீத பஸ்கள் நேற்று இயக்கப்படவில்லை. அவை பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக திருப்பூரில் டவுன் பஸ்கள் சரிவர இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

முன்னதாக நேற்று காலை அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யு. சார்பில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் நேற்று மாலை அரசு சார்பில் சென்னையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில், வருகிற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அனைத்து சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு எட்டப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் சம்மதம் தெரிவித்திருந்தனர். ஆனால் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், அதுவரை தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போவதாகவும் அறிவித்தனர்.

இதற்கு ஆதரவாக திருப்பூர் பணிமனையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் திடீரென காங்கேயம் ரோட்டில் மாலை 5 மணியளவில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தெற்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தாங்கள் தற்காலிகமாக காத்திருப்பு போராட்டத்தை நிறுத்திக்கொள்வதாகவும், அதற்கு பதிலாக நாளை(இன்று) முதல் முழு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட ஆலோசித்து வருவதாகவும் ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்