பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-15 23:15 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த கொம்பேறிபட்டி பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி, அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தாள். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவளுடைய தாயார் கோவிலுக்கு சென்றுவிட்டார். இதனால் சிறுமியை அங்கன்வாடி மையத்துக்கு கொண்டு விடுவதற்காக, அவளுடைய பாட்டி வீட்டுக்கு வெளியே வந்தார்.

அப்போது, அங்குள்ள உறவினர் வீட்டுக்கு அய்யலூர் அருகே உள்ள குப்பாம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ராஜ்குமார் (வயது 19) என்பவர் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அவரிடம் சிறுமியை அங்கன்வாடி மையத்தில் கொண்டுவிடுமாறு பாட்டி தெரிவித்தார். உடனே மொபட்டில் சிறுமியை ஏற்றிக்கொண்டு ராஜ்குமார் சென்றார்.

ஆனால், மாலை வரை அங்கன்வாடி மையத்தில் இருந்து சிறுமி வரவில்லை. இதையடுத்து, உறவினர்கள், பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது, சிறுமியை அழைத்து சென்ற ராஜ்குமாரை கல்பட்டிசத்திரம் அருகே உள்ள புதுவாடியில் வைத்து பொதுமக்கள் பிடித்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியான தகவல் வெளியானது.

அதாவது, சிறுமியை அங்கன்வாடிக்கு அழைத்து செல்லாமல் கிணத்துப்பட்டி அருகே உள்ள சியான்கேணி மலைப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இதையடுத்து உடலை அங்கு போட்டுவிட்டு சென்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும், அவரிம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த ராஜ்குமாருக்கு தூக்குதண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். இந்த மறியலில் மாதர்சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். இதன்காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கோபால், சிவக்குமார் ஆகியோர் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டு, சிறுமியின் உடலை வாங்கிக்கொண்டு புறப்பட்டு சென்றனர். இந்த மறியல் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்