வேலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

வேலூரில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-15 00:22 GMT

வேலூர்,

அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை சமாளிக்க, தொழிலாளர்களுடைய சேமிப்பு பணம், ஓய்வுகால பலன்கள் என சுமார் ரூ.7 ஆயிரம் கோடியை செலவு செய்து விட்டதாக கூறி, அதை திரும்ப வழங்க வேண்டும், ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சட்டப்படியான ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும், பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

அதன்படி நேற்று முதல், தமிழகம் முழுவதும் அந்தந்தப் போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். அதேபோல், வேலூர் வள்ளலாரில் உள்ள மண்டல போக்குவரத்துக்கழக அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொ.மு.ச., சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எம்.எல்.எப் உள்பட 10 தொழிற்சங்கங்கள் அடங்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்தப் போராட்டத்துக்கு தொ.மு.ச. வேலூர் மண்டல பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மற்றொரு பொதுச்செயலாளர் (நிர்வாக பிரிவு) பாலகிருஷ்ணன், சி.ஐ.டி.யு. பரசுராமன், ஏ.ஐ.டி.யு.சி. ராமதாஸ் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

அவர்கள் தொழிலாளர்களின் பணம் 7 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்தப் போராட்டம் இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது.

மேலும் செய்திகள்