ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலி கிராம மக்கள் அதிர்ச்சி

புதுவையில் ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். டெங்கு பாதிப்பு புதுவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பரவியதால் பொதுமக்கள் மத்தி

Update: 2017-12-14 23:07 GMT

வில்லியனூர்,

புதுவையில் ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

புதுவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பரவியதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டது. அரசு, ஜிப்மர் மருத்துவமனைகளில் தனி வார்டு அமைத்து டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கிராமங்களில் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தநிலையில் மீண்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 2 பேர் இறந்து போனார்கள். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே கோர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுகுணராஜ் (வயது 35). அந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 11–ந்தேதி காய்ச்சலால் அவதிப்பட்டார். இதற்காக கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது ரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்தபோது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிந்தது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் சுகுணராஜ் பரிதாபமாக இறந்தார். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், ஒரு மகள், மகனும் உள்ளனர்.

அதே ஊரை சேர்ந்த தொழிலாளியான முனுசாமி (59) என்பவர் காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து முனுசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை முனுசாமி பரிதாபமாக இறந்தார். அவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரே ஊரில் ஒரே நாளில் 2 பேர் பலியானது பற்றி தகவல் அறிந்து அமைச்சர் கந்தசாமிக்கு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சுகுணராஜ், முனுசாமி ஆகியோரது வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார். அப்போது சுகுணராஜ் மனைவிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வேலை வழங்கப்படும். முதல்–அமைச்சர் நாராயணசாமியுடன் கலந்து ஆலோசித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். ஒரேநாளில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலியான சம்பவம் அந்த கிராம மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் செய்திகள்