கொசஸ்தலை ஆற்று பாலம் மீண்டும் சேதம்

ஊத்துக்கோட்டை அருகே ரூ.50 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட கொசஸ்தலை ஆற்று பாலம் மீண்டும் சேதம் அடைந்தது. அதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2017-12-14 22:15 GMT
சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரி 35 அடி உயரம் கொண்டது. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். ஏரி முழுவதுமாக நிரம்பினால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி, ஆற்றம்பாக்கம், ஒதப்பை, சோமதேவன்பட்டு, கொரகண்தண்டலம், மோவூர், மெய்யூர், செம்பேடு, தாமரைபாக்கம், அணைக்கட்டு, காரனோடை பகுதிகள் வழியாக பாயந்து வங்கக்கடலில் கலக்கிறது. 1965-ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது.

இந்த பாலம் வழியாகத்தான் ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பலத்த மழைக்கு பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியதால் உபரிநீரை அதிகபட்சமாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இப்படி அதிகபட்சமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒதப்பையில் உள்ள பாலத்துக்கு அடியில் தூண்களின் உறுதிக்காக அமைக்கப்பட்டிருந்த சிமெண்டால் ஆன தளம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதை சீரமைக்க தமிழக அரசு ரூ.50 லட்சத்தை ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு கடந்த ஆண்டு தூண்களின் உறுதிக்கான தளம் சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழைக்கு கொசஸ்தலை ஆற்றின் கிளை நதியான நெல்வாய் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் ஒதப்பை கொசஸ்தலை ஆற்றில் பாய்கிறது. இதனால் தூண்களின் உறுதிக்காக ரூ.50 லட்சம் செலவில் சீரமைக்கபட்ட தளம் மீண்டும் சேதம் அடைந்தது.

சுமார் 10 நாட்கள் பெய்த மழைக்கே பாலத்தின் அடியில் தூண்களின் உறுதிக்காக அமைக்கப்பட்டிருந்த தளம் சேதம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தளம் சீரமைக்க தரமான பொருட்கள் பயன்படுத்தாததே சேதம் அடைந்ததற்கு காரணமாகும் என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். சேதம் அடைந்த தளத்தை மீண்டும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் செய்திகள்