குமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல்

குமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

Update: 2017-12-14 23:00 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய ஒகி புயல், கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல்காந்தி நேற்று குமரி மாவட்டம் வந்தார்.

இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து குமரி மாவட்டம் தூத்தூர் புனித யூதா ததேயு கல்லூரிக்கு ஹெலிகாப்டர் மூலம் நேற்று மதியம் 1.45 மணிக்கு வந்து இறங்கினார். அங்கிருந்து கார் மூலம் சின்னத்துறை புனித யூதா ததேயு ஆலய முன்புறம் உள்ள மைதானத்தில் 2 மணியளவில் வந்தார்.

அவரது வருகையையொட்டி ஆலயம் முன்புறம் உள்ள மைதானத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக தகர ஷீட் அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. அதில், ராகுல்காந்தியை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்துவதற்காக புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் பாதிப்புக்குள்ளான மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் தனித்தனியாக அமர்வதற்கு வசதியாக இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

ராகுல்காந்தி அந்த அரங்கத்திற்குள் வந்ததும், முதலில் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களை சேர்ந்த பெண்களை சந்தித்து பேசினார். அப்போது அந்த பெண்கள் கதறி அழுதவாறு, கடலில் மீன்பிடிக்க சென்று புயலால் காணாமல் போன தங்களது குடும்பத்தினரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். மேலும், இதுபோன்ற புயல் உள்ளிட்ட பேரிடர் சமயங்களில் மீனவர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்தும் கோரிக்கை வைத்தனர். தமிழில் அந்த பெண்கள் பேசியதை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ராகுல்காந்தியிடம் ஆங்கிலத்தில் தெரிவித்தார். உடனே அவர் அந்த பெண்களுக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.

மீனவ பெண்களுடன் அமர்ந்திருந்த பங்குதந்தையர்களும் சேத விவரங்கள் குறித்து ராகுல்காந்தியிடம் தெரிவித்தனர். அதையும் அவர் கேட்டறிந்தார்.

பின்னர், பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மக்களை சந்தித்து பேசினார். அப்போது, பாதிக்கப்பட்ட பலர் மனுக்கள் கொடுத்தனர். தொடர்ந்து மீனவர்கள் மத்தியில் 5 நிமிடம் உரையாற்றினார்.

பின்னர், அவர் அங்கிருந்து கார் மூலம் 2.35 மணிக்கு மீண்டும் தூத்தூர் புனித யூதா ததேயு கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருவனந்தபுரத்திற்கு சென்றார்.

இந்த நிகழ்ச்சியின் போது விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை ராகுல்காந்தியிடம் தெரிவிப்பதற்காக குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

ஆனால், அவர்கள் தங்களை சந்தித்து சேத விவரங்கள் குறித்து ராகுல்காந்தி எதுவும் கேட்கவில்லை என்றும், தாங்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகவும் கூறினர்.

மேலும் செய்திகள்