கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்து விட்டது எடியூரப்பா குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எடியூரப்பா குற்றம்சாட்டினார்.

Update: 2017-12-13 21:54 GMT

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா ராய்ச்சூரில் நேற்று பரிவர்த்தனா பயண பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:–

கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. சட்டம்–ஒழுங்கை சரிசெய்ய இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. கற்பழிப்பு சம்பவங்களில் நாட்டிலேயே பெங்களூரு முதல் இடத்தில் உள்ளது. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாநிலத்தில் பா.ஜனதா தொண்டர்கள் மீது பொய் வழக்குகளை இந்த அரசு போட்டு தொல்லை கொடுக்கிறது. ஆனால் மந்திரிகள் மீது பல வழக்குகள் பதிவாகின்றன. அவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுப்பது இல்லை. புகாருக்கு உள்ளான மந்திரிகளுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறது. போலீஸ் துறையை கர்நாடக அரசு தவறாக பயன்படுத்துகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக சித்தராமையா சொல்கிறார். எங்கே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அவர் தெரியப்படுத்த வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் அரசு வாங்கியுள்ள கடன் எவ்வளவு என்பதை இந்த அரசு மக்கள் முன் வைக்க வேண்டும். மாநிலத்தில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை.

வருகிற தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். பா.ஜனதா ஆட்சி அமைந்தால் அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்கும் தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம். இந்துமத அமைப்புகளை சேர்ந்த தொண்டர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்படுகிறார்கள். அதை இந்த அரசு தடுக்கவில்லை.

கொலையாளிகளை கைது செய்யவில்லை. மாறாக அவர்களை பாதுகாக்க இந்த அரசு முயற்சி செய்கிறது. அதனால் தான் நாங்கள் இந்த கொலைகள் பற்றி தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையை கேட்கிறோம்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

மேலும் செய்திகள்