கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும் தேவேகவுடா பேச்சு

லிங்காயத் சமூகத்தை சித்தராமையா உடைத்துவிட்டார், அதனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும் என்று தேவேகவுடா கூறினார்.

Update: 2017-12-13 21:48 GMT

பெங்களூரு,

ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் மாநாடு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:–

இது வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு. மாநில கட்சியான ஜனதா தளம்(எஸ்) தனது பலத்தை நிலை நிறுத்திக்கொள்ள போராடி வரும் இந்த சூழ்நிலையில் மக்கள் ஆதரவுடன் இத்தகைய பிரமாண்ட மாநாடு நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சித்தராமையா தனது ஒரு மாத சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அடிப்படை காங்கிரசார் ஒரு புறமும், போலி காங்கிரசார் இன்னொரு புறமும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள்.

புதிய கர்நாடகத்தை உருவாக்குவதாக சித்தராமையா சொல்கிறார். கடந்த 5 ஆண்டுகள் அவர் என்ன செய்தார்?. முன்பு அம்பேத்கருக்கு என்ன நடந்தது என்பது பழைய வி‌ஷயம். இப்போது ஆதிதிராவிட மக்களுக்கு என்ன நடக்கிறது என்பது புதிய வி‌ஷயம். பசவண்ணர் பிறந்த பசவ கல்யாணில் இருந்து சித்தராமையா சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

ஆனால் பசவண்ணர் பிறந்த லிங்காயத் சமூகத்தை சித்தராமையா உடைத்துவிட்டார். இதற்காகவே 2 மந்திரிகளை பேச விட்டுள்ளார். சாதிகளை பிரித்தாளும் கொள்கையை அவர் அனுசரிக்கிறார். கர்நாடக வரலாற்றில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் தான் மிக அதிக அளவுக்கு முறைகேடுகள் நடந்தன. அந்த முறைகேடுகளை பகிரங்கப்படுத்தியவர் குமாரசாமி.

காங்கிரசில் அடிப்படை காங்கிரசாரின் நிலை என்ன?. இப்போது சித்தராமையா எந்த புதிய கர்நாடகத்தை உருவாக்குகிறார்?. எனது ஆட்சியில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கூறிக்கொண்டு சித்தராமையா சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். அரசின் சாதனைகளை விளம்பரம் செய்ய வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு சித்தராமையா ஒப்பந்தம் கொடுத்துள்ளார். இது சாதனைகளை சந்தைப்படுத்தும் அரசு.

5 ஆண்டுகளுக்கு முன்பு முதல்–மந்திரி பதவியை பெற 90 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற சித்தராமையாவுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது?. இத்தகைய மோசமான அரசை நான் பார்த்தது இல்லை. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும். குமாரசாமி முதல்–மந்திரியாக 115 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதற்கு மாநில மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்.

இவ்வாறு தேவேகவுடா பேசினார்.

மேலும் செய்திகள்