கடலூரில் அரசு பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் கடலூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-12-13 00:18 GMT
கடலூர்,

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு(ஜாக்ஜியோ) சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 8-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக தமிழக அரசு பணியாளர்களுக்கு அனைத்து படிகளையும் வழங்க வேண்டும்.

அரசு பணியாளர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ.18 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஓய்வூதியம் வழங்கப்படாத அனைத்து நிலை அரசு பணியாளர்களுக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது வினியோகத்திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

உண்ணாவிரதம்

இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் துரை.சேகர் தலைமை தாங்கினார். அரசு பணியாளர் சங்க சிறப்பு மாவட்ட செயலாளர் ராஜாமணி, ஜாக்ஜியோ இணை அமைப்பாளர்கள் சிவகுமார், டி.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

போராட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை பணியாளர் சங்க மாநில தலைவர் சுந்தரமூர்த்தி, நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் கருப்பையா, சத்துணவு பணியாளர் சங்க நிர்வாகிகள் பரமசிவம், பாலகிருஷ்ணன், டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகிகள் நாகராஜன், கார்த்திகேயன் மற்றும் சத்துணவு, அங்கன்வாடி, ரேஷன்கடை மற்றும் டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்