குமட்டாவை தொடர்ந்து சிரசியிலும் பா.ஜனதா பேரணியில் கலவரம்
குமட்டாவை தொடர்ந்து சிரசியில் நடந்த பா.ஜனதா பேரணியிலும் கலவரம் ஏற்பட்டது. அப்போது 17 வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. இதுதொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
மங்களூரு,
இந்த நிலையில் பரேஸ் மேஸ்காவின் சாவுக்கு நீதி கேட்டும், அவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா? என்பதை கண்டறிய வேண்டும் என்றும், அப்படி அவர் கொலை செய்யப்பட்டிருந்தால் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று முன்தினம் குமட்டாவில் பா.ஜனதா முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.
அப்போது அங்கு கலவரம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும் வாகனங்கள் மீதும் கல்வீசப்பட்டது. 2 போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் உள்பட பலர் காயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதன்காரணமாக அப்பகுதியே போர்க்களம்போல் காட்சி அளித்தது. சம்பவம் தொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டனர்.இதனால் குமட்டா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பின் பிடியில் குமட்டா பகுதி உள்ளது. இந்த நிலையில் நேற்று குமட்டா பகுதியில் அமைதி நிலவியது. பஸ்கள் வழக்கம்போல் ஓடின. ஓரிரு கடைகள் திறந்திருந்தன. தொடர்ந்து போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று பரேஸ் மேஸ்காவை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உத்தர கன்னடா மாவட்டம் சிரசியில் பா.ஜனதா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பேரணி நடந்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சிரசி டவுனில் இருந்து பா.ஜனதாவினரும், இந்து அமைப்பினரும் பேரணியாக புறப்பட்டு காஜுஹள்ளி–தேவிகெரே பகுதிக்கு வந்தனர்.அப்போது திடீரென போராட்டக்காரர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரும் போராட்டக்காரர்கள் மீது கல்வீசி தாக்கினர். பின்னர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதன்காரணமாக அப்பகுதியே போர்க்களமாக மாறியது. போராட்டக்காரர்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடியதில் 28 பேர் காயமடைந்தனர். அதில் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் போராட்டத்தின்போது 4 அரசு பஸ்கள், 6 கார்கள், 7 போலீஸ் வாகனங்கள் என மொத்தம் 17 வாகனங்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டது. 5 மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. 30 கடைகளும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன.நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதையடுத்து போலீசார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அதில் 70 பேர் போலீசாரிடம் சிக்கினர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 70 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் போராட்டக்காரர்கள் வந்த 200 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து கைதானவர்களை போலீசார், போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அதனால் அங்கு சுமார் 2,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சிரசி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதுமட்டுமல்லாமல் மண்டியா, பல்லாரி, தார்வார், பெலகாவி, பெங்களூரு ஆகிய மாவட்டங்களில் இருந்து உயர் போலீஸ் அதிகாரிகள் சிரசிக்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உத்தர கன்னடா மாவட்ட கலெக்டர் நகுல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
குமட்டாவில் தற்போதுதான் அமைதி நிலை திரும்பி வருகிறது. அதற்குள் சிரசியில் கலவரம் ஏற்பட்டு விட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சிரசி முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க ஆலோசித்து வருகிறேன்.நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் வளையத்திற்குள் சிரசி உள்ளது. அதனால் யாரும் தேவையில்லாமல் கலவரத்தில் ஈடுபட வேண்டாம். மீறினால் சட்ட நடவடிக்கை பாயும்.
இவ்வாறு அவர் கூறினார்.