திண்டுக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் பணிகள் பாதிப்பு

திண்டுக்கல்லில், கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.

Update: 2017-12-12 23:51 GMT
திண்டுக்கல்,

ஊதிய உயர்வு, துணை டவர் நிறுவனம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல்லிலும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் 146 பேர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் அலுவலகத்துக்கு செல்லவில்லை. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதனால் திண்டுக்கல்- பழனி சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று காலையில் தலைமை அலுவலகம் முன்பு ஊழியர்கள் திரண்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பி.எஸ்.என்.எல். தேசிய தொலைதொடர்பு சங்க தலைவர் அருளானந்தம் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசும் போது கூறியதாவது:-

3-வது ஊதிய மாற்றம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதமே ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசு அதனை வழங்காமல் தாமதப்படுத்தி வருகிறது. இதனால் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே 3-வது ஊதிய மாற்றத்தை உடனே அமல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றத்தில் முரண்பாடுகள் இருந்தால் அனைத்து சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஊதிய மாற்றத்தை அமல்படுத்தும் போது சேவை கட்டணத்தை உயர்த்தக்கூடாது.

2-வது ஊதிய மாற்றத்தில் உள்ள பல பரிந்துரைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் உயிர்நாடியாக உள்ள செல்போன் டவர்களை தனியாக பிரித்து, துணை டவர் நிறுவனம் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சி நடக்கிறது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து இன்றும் (புதன்கிழமை) வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. 

மேலும் செய்திகள்