ஊதிய உயர்வு கோரி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு கோரி தஞ்சை மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-12 22:45 GMT
தஞ்சாவூர்,

பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு 1-1-2017 முதல் ஊதிய உயர்வு வழங்கக்கோரி நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. தஞ்சை மாவட்டத்திலும் இந்த வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் பணியாற்றும் அதிகாரிகள் 117 பேரும், 530 ஊழியர்கள் என மொத்தம் 647 பேர் கலந்து கொண்டனர்.

ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தப்போராட்டத்தால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தஞ்சை மேரீஸ்கார்னரில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையமும் செயல்பட வில்லை. வாடிக்கையாளர்கள் தொலைபேசி, செல்போன் கட்டணத்தை செலுத்த முடியாமலும் அவதிப்பட்டனர். தொலைபேசி பழுது ஏற்பட்ட இடங்களிலும் சரி செய்ய முடியவில்லை. இதனால் தொலைபேசி வாடிக்கையாளர்களும் அவதிப்பட்டனர்.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு ஆதரவாக பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கத்தினரும் தஞ்சை மேரீஸ்கார்னரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில அமைப்பு செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, தங்கையன், மாவட்ட தலைவர் தனபாலன், மாவட்ட செயலாளர் சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்