கோவில்பட்டி அருகே டெங்கு காய்ச்சலுக்கு கட்டிட தொழிலாளி பலி

கோவில்பட்டி அருகே, டெங்கு காய்ச்சல் பாதித்த கட்டிட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2017-12-12 23:00 GMT

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே கிழவிபட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மகன் செல்வமுருகன் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ராமலட்சுமி (25). இவர்களுக்கு கருசி அம்மாள் (4) என்ற மகள் உள்ளார்.

கடந்த சில நாட்களாக செல்வமுருகன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். எனவே கடந்த 4–ந்தேதி அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரிய வந்தது. எனவே அவரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கிழவிபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. வீட்டின் சுற்றுப்புறங்களில் தண்ணீரை தேங்க விட வேண்டாம், தண்ணீர் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். காய்ச்சிய குடிநீரையே பருக வேண்டும் என்று பொதுமக்களுக்கு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்