வங்கியில் போலி ஆதார் அட்டைகள் தயாரித்த 3 பேர் கைது

வங்கியில் இருந்த ஆதார் கருவிகளை திருடிச்சென்று வெளிமாநிலத்தவர்களுக்கு போலியான ஆதார் அட்டைகளை தயாரித்து கொடுத்த 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-12-11 23:15 GMT

ஆலந்தூர்,

சென்னை திருவான்மியூர் கடற்கரை பகுதியில் திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசீல் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் கடற்கரை பகுதியில் சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர்.

போலீசார் வருவதைக் கண்டதும் அங்கிருந்து மூவரும் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அவர்கள் மூவரும், சென்னை கொசப்பேட்டையை சேர்ந்த அருண்(வயது 25), பட்டாளத்தை சேர்ந்த பாலமுருகன்(28), வேப்பேரியில் வசிக்கும் நேபாள நாட்டை சேர்ந்த நிம்பகதூர் கதிர்(24) எனத் தெரியவந்தது.

அருண், பாலமுருகன் ஆகியோர் சென்னையில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் கம்ப்யூட்டரில் ஆதார் அட்டைகளை பதிவு செய்யும் பணியை செய்து வந்தனர். இவர்கள் நிம்பகதூர் கதிர் உதவியுடன் ஆதார் அட்டை கருவிகளை வங்கியில் இருந்து திருட்டுத்தனமாக கொண்டு வந்துள்ளனர். பின்னர் அதன் மூலம் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு போலி ஆதார் அட்டைகளை தயாரித்து கொடுத்து பணம் பெற்று உள்ளனர்.

இதுவரை 50–க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுபோல் போலி ஆதார் அட்டைகளை தயாரித்து தந்து ஒவ்வொருவரிடமும் ரூ.2 ஆயிரம் வரை பெற்று உள்ளதாகவும் அந்த பணத்தை பங்கு போடும் போதுதான் தகராறு ஏற்பட்டதாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர் லேப்டாப், ஆதார் கருவிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கைதான அவர்கள் யார் யாருக்கு போலி ஆதார் அட்டை தயாரித்துக் கொடுத்தனர் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்