திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் இளம்பெண் சாவு

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் இளம்பெண் உயிரிழந்தார். நஷ்ட ஈடு வழங்கக்கோரி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-11 23:23 GMT
ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள மாம்பாக்கம் பெரிய காலனியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 30). என்ஜினீயர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சிவசங்கரி (வயது 25). பி.எட் படித்துள்ளார். கர்ப்பிணியான சிவசங்கரிக்கு கடந்த வியாழக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை உறவினர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் இரவு சிவசங்கரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த செய்தி கேள்விபட்டதும் சந்திரசேகரன் மிகுந்த மகிழ்ச்சியடைந்து அங்கிருந்த தன்னுடைய உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். ஆனால் அவர்களது சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்க வில்லை.

குழந்தை பிறந்ததும் சிவசங்கரி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதனால் சந்திரசேகரன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

சிவசங்கரி இறந்த செய்தி மாம்பாக்கம், பெரிய காலனி பொதுமக்களுக்கு நேற்று அதிகாலை தெரிய வந்தது. டாக்டர்களின் அலட்சிய போக்கால் சிவசங்கரி மரணம் அடைந்தார் என்றும், சிவசங்கரியின் மரணத்துக்கு காரணமான அரசு ஆஸ்பத்திரி பொறுப்பாளர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டு்ம், சிவசங்கரியின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், பிறந்த குழந்தையின் வளர்ப்பிற்கும், படிப்புக்கும், அரசு பொறுப்பேற்க வேண்டும், சிவசங்கரியின் கணவர் சந்திரசேகருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மாம்பாக்கம்- ஊத்துக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார்.

அதே நேரத்தில் ஊத்துக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த 2 அரசு பஸ்கள் மற்றும் 5 தனியார் பள்ளி வாகனங்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

இதனால் பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். தகவல் கிடைத்த உடன் ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன், வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் ஏராளமான போலீசார் அங்கு விரைந்தனர். சுகாதாரத்துறை கூடுதல் இணை இயக்குனர் சுவாதி, ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபா உஷா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சசிகலாவை பணியிட மாற்றம் செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்