கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்: வீட்டுமனையை மீட்டு தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண், வீட்டுமனையை மீட்டு தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என கலெக்டரிடம் மனு அளித்தார்.

Update: 2017-12-11 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா தளவாய்ப்பாளையம் நடுத்தெருவில் வசித்து வருபவர் கணேசன். இவருடைய மனைவி பார்வதி. இவர் தனது மகன் அடைக்கலராஜா, மகள் மனவளர்ச்சி குன்றிய சத்யா மற்றும் உறவினர்கள் 2 பேருடன் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் இவர்கள் அனைவரும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேலிடம் மனு அளித்தனர். அந்த மனுவை அவர், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கொடுத்து விசாரிக்கும் படி கூறினர். அந்த அதிகாரியும் பார்வதி உள்பட அவருடன் வந்தவர்களை கூட்ட அரங்கை விட்டு வெளியே அழைத்து வந்து விசாரித்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென கூட்ட அரங்கிற்கு வெளியே பார்வதி தனது குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லையே என கூறி கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கூறினர்.

ஆனால் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் எழுந்து செல்லமாட்டோம் என்று உறுதிபட கூறினர். இதையடுத்து அவர்களிடம் என்ன கோரிக்கைக்காக வந்தீர்கள் என அதிகாரிகள் கேட்டனர். அப்போது அவர்கள், தளவாய்ப்பாளையத்தில் 1990-ம் ஆண்டு 2,600 சதுரஅடி பரப்பளவில் வீட்டுமனை வாங்கினோம். 2008-ல் பட்டாமாறுதல் செய்யப்பட்டது. ஆனால் திடீரென அதே ஊரை சேர்ந்த ஒருவர் தனது பூர்வீக சொத்து என்றும், இந்த வீட்டுமனை தனது மனைவி, மகன் பெயரில் இருப்பதாகவும் கூறி எங்களை மிரட்டுகிறார். பட்டா எங்கள் பெயரில் இருக்கும்போது, கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் பாபநாசம் தாசில்தாரிடம் இதே மனைக்கு போலியாக பட்டாவை பெற்று இருக்கிறார்கள். இது தொடர்பாக 6 தடவை கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு சொந்தமான மனையை அபகரித்து கொண்டதுடன் எங்களை தொடர்ந்து சிலர் மிரட்டுகின்றனர் என்று கூறினர்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த அதிகாரிகள், அவர்களை கலெக்டர் அண்ணாதுரையிடம் அழைத்து சென்றனர். அப்போது அவர்கள் அளித்த மனுவில், எங்கள் வீட்டுமனையை அபகரித்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனைப்பட்டா எங்கள் பெயரில் இருக்கும்போது போலியாக பட்டா தயார் செய்துள்ளனர். இதற்கு காரணமான கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சொந்தமான வீட்டுமனையை மீட்டு தர வேண்டும். இல்லையென்றால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதை படித்து பார்த்த கலெக்டர், உடனே அதிகாரிகளை அழைத்து யார் பெயரில் வீட்டுமனைப்பட்டா இருக்கிறது என விசாரணை செய்து நாளைக்கே(இன்று) எனக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் செய்திகள்