அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை முடியும் முன்பே பாதியில் ஓடும் நோயாளிகள்
அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை முடியும் முன்பே நோயாளிகள் பாதியில் ஓடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
மும்பை,
தனியார் ஆஸ்பத்திரிகளில் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவது உண்மைதான். ஆனால் அங்கு போகும் யாரும் சிகிச்சையை முடிக்காமல் பாதியிலேயே ஓடுவது இல்லை. லட்சக்கணக்கில் பணத்தை செலவுசெய்தாலும் தங்களது நோயை குணமாகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. ஆனால் இலவச சிகிச்சை வழங்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் காட்சிகள் மாறுகின்றன. இங்கு வரும் பலர் அவர்களுக்கான சிகிச்சை முடியும் முன்பே பதறியடித்து ஓடிவிடுகின்றனர்.
மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடியும் முன்பே பாதியில் ஓடிய நோயாளிகள் குறித்த விவரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமீபத்தில் கேட்கப்பட்டது. இதில் கடந்த 5 ஆண்டுகளில் ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் இருந்து 3 ஆயிரத்து 855 நோயாளிகள் சிகிச்சை முடியும் முன்பே ஆஸ்பத்திரியில் நிர்வாகத்திடம் எந்த தகவலும் சொல்லாமல் இடத்தை காலி செய்தது தெரியவந்ததுள்ளது.
நோயாளிகள் இப்படி பாதியில் செல்வதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எனினும் ஆஸ்பத்திரி டாக்டர், நர்சுகளே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இவர்கள் சிகிச்சைக்கு வருபவரிடம் அவர் எந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற விவரத்தை கூட முழுமையாக சொல்வதில்லை. அடிக்கடி பரிசோதனை என்ற பெயரில் ரத்த மாதிரியை எடுக்கிறார்கள். ஆனால் அதன் முடிவுகள் பற்றிய தகவல்களை நோயாளிகளிடம் தெரிவிப்பதில்லை.
மேலும் அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது, எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற எந்த தகவலையும் கூறுவதில்லை.
இது அரசு ஆஸ்பத்திரிகளில் சேரும் நோயாளிகளுக்கு பயத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்துகிறது. எனவே தான் அவர்கள் சிகிச்சை முடியும் முன்பே டாக்டரிடம் சொல்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்து ஓட்டம் பிடிக்கிறார்கள்.
இதுதவிர அரசு ஆஸ்பத்திரிகளில் கழிவறை வசதிகள் கூட முறையாக இருப்பது இல்லை. இதுபோன்ற காரணங்களாலும் நோயாளிகள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறுகின்றனர்.
எனினும் நோயாளிகள் பாதியில் செல்வதற்கு ஜே.ஜே. ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் வேறு காரணத்தை கூறுகிறார். அவர் கூறுகையில், ‘‘அறுவை சிகிச்சைக்கு முன் செய்யப்படும் சில பரிசோதனைகளுக்கு அரசு ஆஸ்பத்திரியிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த கட்டணத்தை செலுத்துவதில் இருந்து தப்பிக்கவே பலர் எங்களிடம் தெரிவிக்காமல் ஆஸ்பத்திரியில் இருந்து சென்றுவிடுகின்றனர்’’ என்றார்.
அரசு ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் சிகிச்சை முடியும் முன்பே செல்வதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக இதுமட்டுமே காரணமல்ல என்பது அனைவரும் அறிந்தது தான். எனவே இனிவரும் காலங்களில் அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு நோயாளிகள் சிகிச்சை முடியும் முன்பே செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்தி ஊழியர்கள் நோயாளிகளுடனான தங்களது அணுகுமுறையை மாற்றி கொள்ள வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.