புனேயில், லாரி மீது கார் மோதி தாய், தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி
புனேயில் லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில் தாய், தந்தை, மகன் உள்பட 4 பேர் பலியானார்கள்.
புனே,
மும்பையை சேர்ந்தவர் யஷ்வந்த் பாண்டுரங் மானே (வயது56). இவரது மகள் சத்தாராவில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாள். மும்பை வந்திருந்த அவரை சத்தாராவில் கொண்டு விடுவதற்காக யஷ்வந்த் பாண்டுரங் மானே தனது மனைவி சாரதா (47), மகன் ஹிருஷிகேஷ் (20) ஆகியோருடன் சத்தாரா சென்றிருந்தார்.
பின்னர் அங்கு மகளை விட்டு விட்டு தனது மனைவி, மகனுடன் யஷ்வந்த் பாண்டுரங் மானே நேற்றுமுன்தினம் இரவு காரில் புறப்பட்டு மும்பைக்கு வந்து கொண்டிருந்தனர்.
காரை டிரைவர் ராம்சந்திர சுர்வே (70) என்பவர் ஓட்டினார்.
கார் நேற்று அதிகாலை 4 மணியளவில் புனே ஜாபுல்வாடி பகுதியில் வந்து கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. கார் டிரைவர் உள்பட நான்கு பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து செத்தனர். தகவல் அறிந்து வந்த அப்பகுதி போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாய், தந்தை, மகன் பலியான இந்த சம்பவம் யஷ்வந்த பாண்டுரங் மானேயின் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.