வேப்பூர் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

வேப்பூர் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.

Update: 2017-12-10 23:09 GMT
வேப்பூர்,

வேப்பூர் அருகே உள்ள பாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் ரித்திக்ரோஷன்(வயது 10). இவன், வேப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளிக் கூடம் விடுமுறை என்பதால் ரித்திக்ரோஷன், தனது தம்பியான நீலேசுடன்(8) விளையாடிக்கொண்டிருந்தான்.

பின்னர் இருவரும் பாகுளத்தில் உள்ள விவசாயி ஒருவருடைய கிணற்றுக்கு அருகில் விளையாடினர். அப்போது ரித்திக்ரோஷன் தவறி, அருகில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்து, தண்ணீருக்குள் மூழ்கினான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீலேஷ் ஓடோடி சென்று தனது பெற்றோரிடம் தெரிவித்தான்.

இதனால் அதிர்ந்துபோன பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதறியடித்துக்கொண்டு அந்த கிணற்றுக்கு வந்தனர். கிணற்றில் இறங்கி தேடிப்பார்த்தனர். ஆனால் ரித்திக்ரோஷன் கிடைக்கவில்லை. இது பற்றி வேப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் அஞ்சுகராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இறங்கி ரித்திக்ரோஷனை தேடிப்பார்த்தனர். இருப்பினும் அவன் கிடைக்கவில்லை.

இதையடுத்து மின்மோட்டார் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு 60 அடி ஆழத்தில் மாணவன் உடல் இருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து மாணவனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கிணற்றில் விழுந்த ரித்திக்ரோஷன், தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி இறந்திருப்பது தெரியவந்துள் ளது. இது தொடர்பாக வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்