தாறுமாறாக ஓடிய கார், ஆற்றில் பாய்ந்து மூழ்கியது; சிக்கித்தவித்த 2 இளம்பெண்கள் மீட்பு
மருவூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்து மூழ்கியது. காரில் சிக்கிக்கொண்ட 2 இளம்பெண்களை அப்பகுதி கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர்.
பெங்களூரு,
தட்சிண கன்னடா மாவட்டம் பஜ்பே பகுதியைச் சேர்ந்தவர் நிஷா ஆச்சார்யா(வயது 22). இவரும் கேரளாவைச் சேர்ந்த பிரதீக்ஷா(20) என்பவரும் தோழிகள் ஆவார்கள். தற்போது பிரதீக்ஷா, நிஷாவுடன் பஜ்பே பகுதியில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. நேற்று காலையில் கேரளாவில் இருந்து பிரதீக்ஷாவின் பெற்றோர் மங்களூருவுக்கு வருவதாகக் கூறியிருந்தனர். அவர்களை அழைத்து வருவதற்காக நிஷாவும், பிரதீக்ஷாவும் பஜ்பேயில் இருந்து ஒரு வாடகை காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்
அவர்கள் பஜ்பேயில் இருந்து மருவூர் வழியாக மங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது நிஷாவும், பிரதீக்ஷாவும் மருவூர் அருகே பால்குனி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை பார்வையிட சென்றனர்.
அணையை பார்த்துவிட்டு பின்னர் இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது காரை நிஷா ஓட்டியதாக கூறப்படுகிறது. அவர்கள் மருவூர் ஆற்றுப்பாலத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நிஷாவின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றில் பாய்ந்தது.
இதனால் காருக்குள் சிக்கிக்கொண்ட நிஷாவும், பிரதீக்ஷாவும் அலறி துடித்தனர். இதைப்பார்த்த அப்பகுதி கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆற்றில் குதித்து காருக்குள் சிக்கிக்கொண்ட நிஷாவையும், பிரதீக்ஷாவையும் மீட்டனர். ஆனால் கார் ஆற்றில் மூழ்கியது. இந்த விபத்தில் 2 இளம்பெண்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அப்பகுதியினர் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பஜ்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆற்றில் மூழ்கி கிடந்த காரை தீயணைப்பு துறையினரின் உதவியுடன் போலீசார் மீட்டனர்.