விவாகரத்து ஆனாலும் ஆண் மனைவி, குழந்தைகளை கட்டாயம் பராமரிக்க வேண்டும்

விவாகரத்து ஆனாலும் ஆரோக்கியமாக உள்ள ஒரு ஆண் பிரிந்து வாழும் தனது மனைவி, குழந்தைகளை கட்டாயம் பராமரிக்க வேண்டும் என மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-12-10 23:15 GMT

மும்பை,

சோலாப்பூரை சேர்ந்த ஒருவர் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

நான் மருந்துக்கடை நடத்தி வந்தேன். விவாகரத்து ஆகி பிரிந்து வாழும் எனது மனைவி, மகளுக்கு கோர்ட்டு உத்தரவின்பேரில் மாதந்தோறும் ஜீவனாம்சமாக ரூ.9 ஆயிரம் கொடுத்து வருகிறேன். இந்தநிலையில் இக்கட்டான சூழ்நிலையால் எனது மருந்துக்கடையை மூடிவிட்டேன். தற்போது நான் தொழில் எதுவும் செய்யவில்லை.

எனவே மனைவி, மகளுக்கு மாதந்தோறும் ஜீவனாம்சமாக ரூ.9 ஆயிரம் கொடுக்கவேண்டும் என்ற சோலாப்பூர் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘மனுதாரர் மருந்துக்கடையை மூடிவிட்டார் என்பதற்கான உறுதியான ஆதரங்கள் எதையும் கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை.

இதேபோல நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக உள்ள ஒரு ஆண் விவாகரத்து ஆனாலும் தனது மனைவி, பிள்ளைகளை கட்டாயம் பராமரிக்க வேண்டும்’’ என கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்