கலாசார மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ் பாடல்களை ஆங்கிலத்தில் எழுதி பாடுவதா? இசையமைப்பாளர் தேவா வேதனை

கலாசார மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ் பாடல்களை ஆங்கிலத்தில் எழுதி பாடுவதா? என சினிமா இசையமைப்பாளர் தேவா வேதனை தெரிவித்தார்.

Update: 2017-12-10 22:45 GMT
சேலம்,

சேலம் அமெச்சூர் ஆர்ட்ஸ் மற்றும் மாவட்ட அரசு இசைப்பள்ளி சார்பில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா கவியரங்கம், 50-வது ஆண்டு பொன்விழா மற்றும் விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சேலத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்த இசையமைப்பாளர் தேவா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு நாடு செழிப்பாக இருக்க வேண்டும் என்றால் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி அவர்களது திறமைகளை பாராட்ட வேண்டும். விருதுகள் வழங்குவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. சேலம் அமெச்சூர் ஆர்ட்ஸ் அமைப்பு சார்பில் பல்வேறு கலைஞர்களுக்கும், சமுதாயத்தில் பல்வேறு சேவைகளை புரிந்து வரும் நபர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிப்பதை நான் வரவேற்கிறேன். திருமணம் மற்றும் பல்வேறு விழாக்களில் ஒரு காலத்தில் மெல்லிசை நிகழ்ச்சிகள் நடந்தது.

ஆனால், தற்போது கம்ப்யூட்டர் இசை (டி.ஜே.) வந்துவிட்டது. இதனால் மெல்லிசை கச்சேரி நடத்துபவர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கம்ப்யூட்டர் இசையை தான் தற்போது இளம் தலைமுறையினர் விரும்புகிறார்கள். தமிழ் பாடல்களை எல்லாம், ஆங்கில பாடல்களாக மாற்றிவிட்டனர். சொல்லப்போனால் தமிழ் பாடல்களை ஆங்கிலத்தில் எழுதி பாடுவது வேதனை அளிப்பதாக உள்ளது.

இது கலாசார மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே கருதுகிறேன். வெளிநாடுகளில் இன்னும் தமிழ் இசைக்கு அதிக மவுசு உள்ளது. தற்போதைய சூழலில் கானா பாட்டு, துள்ளல் இசை குறைந்துள்ளது.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது விருப்பம். ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட முயற்சித்தது அவருடைய தனிப்பட்ட முடிவு. ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை இறைவன் தான் நிர்ணயிக்கிறான். அதாவது பூர்வகர்மம் மற்றும் புண்ணியத்தின் அடிப்படையிலேயே அது பிரதிபலிக்கிறது. நான் ஒரு கச்சேரியில் பாடுகிறேன் என்றால், 2 ஆயிரம் பேர் கைத்தட்டுவார்கள். அவர்கள் அனைவரும் என்னை ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. கைத்தட்டுபவர்கள் எல்லாம் நமக்கு ஓட்டு போடுவார்கள் என நினைத்து போட்டியிடுவது முட்டாள்த்தனமானது. எனக்கு அரசியல் நாட்டம் கிடையாது. தற்போது அரசு நன்றாக செயல்படுகிறது. ஆரம்பத்தில் சினிமாவில் என்னை நடிக்க அழைத்தனர். ஆனால் திரைக்கு பின்னால் இருந்து இசையமைக்கும் வாய்ப்புதான் எனக்கு பிடித்திருக்கிறது.

இவ்வாறு தேவா கூறினார். 

மேலும் செய்திகள்