திருமாவளவனை கண்டித்து விஜயபாரத மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

ஆம்பூரில் திருமாவளவனை கண்டித்து விஜயபாரத மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-12-10 21:45 GMT

ஆம்பூர்,

இந்துக்களையும், இந்து கடவுள்களையும் தரக்குறைவாக விமர்சனம் செய்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து ஆம்பூரில் விஜயபாரத மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்ததால், தடையை மீறி நடத்த அக்கட்சியினர் முடிவு செய்து நேற்று காலை கட்சி நிர்வாகிகள் சரவணன், ஆறுமுகம், பிரபு, ஆனந்தன், கோபிநாதன் உள்ளிட்ட 15–க்கும் மேற்பட்டோர் திருமாவளவனை கண்டித்து கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் எஸ்.சந்திரன் தலைமையில் நகர செயலாளர் சக்தி, தொகுதி அமைப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட 50–க்கும் மேற்பட்டோர் கட்சி கொடியுடன் கூடி கோ‌ஷம் எழுப்பிக்கொண்டே விஜயபாரத மக்கள் கட்சி நிர்வாகிகளை நோக்கி ஓடிவந்தனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் விடுதலை சிறுத்தை கட்சியினரை தடுத்து நிறுத்தி, சுற்றி வளைத்துக்கொண்டனர்.

இதனையடுத்து போலீசார் விஜயபாரத மக்கள் கட்சி நிர்வாகிகளை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். அதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் அங்கிருந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் ஆம்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்