வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி கொடூர கொலை

பாணாவரம் அருகே வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

Update: 2017-12-10 21:30 GMT

பனப்பாக்கம்,

பாணாவரம் அருகே வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி கத்தியால் குத்தப்பட்டும், கழுத்தை நெரித்தும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மற்றொரு பெண்ணை, தலையில் கல்லைப்போட்டு கொலைசெய்ய முயற்சி நடந்துள்ளது.

இந்த சம்பவங்கள் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

வேலூர் மாவட்டம் பாணாவரத்தை அடுத்த பள்ளகுன்னத்தூரை சேர்ந்தவர் சகுந்தலா (வயது 70). இவரது கணவர் சீனிவாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு செல்வி (47) என்ற மகளும், மோகன்தாஸ் (43), பெரியசாமி (33) ஆகிய மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி அதே ஊரில் தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

கணவர் இறந்தபின்னர் சகுந்தலா அங்குள்ள ஒரு சிறிய வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு அவரது மகன் மோகன்தாஸ் வீட்டிலிருந்து தினமும் உணவு கொடுப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மகன் மோகன்தாஸ் தனது வீட்டில் இருந்து இட்லி எடுத்துச்சென்று கொடுத்து விட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று காலையில் மோகன்தாசின் மகள் துர்காதேவி (18), தனது பாட்டி சகுந்தலாவுக்கு டிபன் எடுத்துச்சென்றார்.

அப்போது சகுந்தலா, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மோகன்தாஸ் மற்றும் பொதுமக்கள் சென்று பார்த்தனர். அப்போது சகுந்தலாவின் தலை மற்றும் வலது காதின் அருகில் கத்தியால் குத்தப்பட்டிருந்தது. அவருடைய சேலையால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இருந்தது.

இதனால் யாரோ மர்ம நபர்கள், சகுந்தலாவை கத்தியால்குத்தியும், சேலையால் கழுத்தை நெரித்தும் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவருடைய சேலை கலைந்தநிலையில் கிடந்தது.

இதுபற்றி பாணாவரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில்  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அதே கிராமத்தில் சகுந்தலாவின் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள குடிசை வீட்டில் லட்சுமி (50) என்பவர் வசித்து வருகிறார். இவரும், நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய தலையில் யாரோ மர்ம நபர்கள் வீடு கட்டுவதற்கு பயன்படுத்தும் கல்லைப்போட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக லட்சுமி காயத்துடன் உயிர் தப்பினார். தலையில் கல்லைப்போட்டதில் அவர் மயங்கி விட்டார். காலையில் அவர் தலையில் காயத்துடன் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் அவரை வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சகுந்தலாவை கொலை செய்த அதே நபர்கள்தான் லட்சுமியையும் கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்தும் பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்