முதலுதவி: உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும்..

‘முதலுதவி’ என்ற சொல் இப்போது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சாலைகளில் யாராவது விபத்தில் சிக்கியிருந்தால், உடனே அவருக்கு முதலுதவி அளித்து அவரை காப்பாற்ற ஆவன செய்யவேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்திருக்கிறது.

Update: 2017-12-10 05:25 GMT
‘முதலுதவி’ என்ற சொல் இப்போது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சாலைகளில் யாராவது விபத்தில் சிக்கியிருந்தால், உடனே அவருக்கு முதலுதவி அளித்து அவரை காப்பாற்ற ஆவன செய்யவேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்திருக்கிறது. அதனால், உடலில் காயமடையும் பலர் சரியான நேரத்தில் காப்பாற்றப்பட்டிருக் கிறார்கள். ஆனால் முதலுதவி என்பது உடலில் காயமடைந்தவர் களுக்கு மட்டுமல்ல, மனதில் காயமடைந்தவர்களுக்கும் அவசியம் என்ற விழிப்புணர்வு சமூகத்தில் போதுமான அளவு ஏற்படவில்லை.

இப்போது விபத்துகள் அதிகரித்துக்கொண்டிருப்பதுபோல், தற்கொலைகளும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இரண்டுமே போட்டிப்போட்டு விலைமதிப்பற்ற மனித உயிர்களை பலிவாங்கிக்கொண்டிருக்கிறது. அதனால் விபத்துகளில் சிக்கியவர்களின் உடலுக்கு மட்டுமல்ல, மனஅழுத்தத்தில் சிக்கி இருப்பவர்களின் மனதுக்கும் முதலுதவி தேவை என்ற கட்டாயம் உருவாகியிருக்கிறது. உங்களுக்கு நெருக்கமானவர்களின் மனதுக்கு முதலுதவி அளிக்க நீங்களும் கற்றுக்கொள்ள வேண்டும்.

விபத்தில் ஒருவர் சிக்கியிருக்கும்போது அவருக்கு எத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு வெளிப்படையாகத் தெரியும். அவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அது அவரது உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்ற உண்மையையும் உங்களால் உணர்ந்து கொள்ளமுடியும். யாருக்கு தகவல் கொடுக்கவேண்டும், எப்படி உதவி செய்யவேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரியும். அதுமட்டுமின்றி நீங்கள் ஒரு கைகொடுத்தால், உங்களோடு சேர்ந்து அவருக்கு உதவ பல கைகள் ஆங்காங்கே நீளும். ஆனால் மனஅழுத்தத்தில் சிக்கிக்கிடப்பவரை கண்டறிவது கடினம். கண்டறிந்தாலும் அடுத்து அவர் என்ன மாதிரியான நடவடிக்கையில் இறங்குவார் என்பதை கணிப்பதும் கடினம். உதவ விரும்புவதை அவருக்கு உணர்த்துவதும், அந்த உதவியை அவரை ஏற்றுக்கொள்ளச் செய்வதும் சிரமம். இப்படி மனதுக்கு முதலுதவி அளிப்பதில் பல சிக்கல்களும், கடினங்களும் இருந்தாலும் அவைகளை எல்லாம் கடந்து, நம்மை சுற்றியிருக்கும் ஒவ்வொரு சகமனிதனுக்கும் உதவுவது நமது கடமை! அந்த கடமையை மனப்பூர்வமாக செய்யும்போது எளிதாக ஒருவரை மனஅழுத்தத்தில் இருந்து மீட்டுவிடலாம். அவர் மீண்டும் தன்னம்பிக்கையோடு வாழ்வதைப் பார்த்து பெருமிதமும், ஆத்மதிருப்தியும் அடையலாம்.

உங்களை சுற்றியிருப்பவர்களில் யாருடைய மனதுக்கெல்லாம் முதலுதவி அளிக்கவேண்டும் என்பதை முதலில் சொல்கிறேன்.

உடலில் ஏதாவது நோய் ஏற்பட்டால் சோர்வு, காய்ச்சல் போன்றவை முதல் அறிகுறியாக தென்படுவதுபோல், உச்சகட்ட மன அழுத்தத்தில் இருப்பவர்களும் தற்கொலை போன்ற மிக மோசமான முடிவினை எடுக்கும்போது ஏதாவது அறிகுறியை வெளிப் படுத்தவே செய்வார்கள். அறிகுறிகள் அவர்களது சொல், செயல் மூலம் வெளிப்படும்.

‘எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. வாழப்பிடிக்கவில்லை.. செத்துப்போய்விடலாம் என்று நினைக்கிறேன்’ என்று சொல்லலாம். தனக்கு பிடித்தமானவர்களோடு மனம்விட்டுப் பேசி தனது விரக்தியை வெளிப்படுத்தலாம். தனிமையை விரும்பி எப்போதும் தனித்திருக்க முயற்சிக்கலாம். இறந்து போன குடும்ப உறுப்பினர்கள் பற்றியோ, இறந்து போன நண்பர்களை பற்றியோ அதிகம் பேசலாம். இணைய தொடர்புகள் மூலம் தற்கொலை பற்றிய விஷயங்களையோ- முறைகளையோ தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டலாம். தான் பாதுகாக்கும் மிக பிரியமான பொருளை, தனக்கு நெருக்கமான யாரிடமாவது ஒப்படைக்கலாம். இப்படி அசாதாரணமான ஏதாவது அறிகுறிகள் அவர்களிடம் இருந்து வெளிப்பட்டுக்கொண்டிருக்கும்.

உங்கள் நண்பரோ, உறவினரோ இரண்டு மூன்று பேரிடம் ‘நான் இனியும் வாழ்ந்து என்ன ஆகப்போகுது..’ என்ற மாதிரியான பொருள்படும்படி பேசினால், உடனே உஷாராகிவிடுங்கள். அவர் மிக மோசமான முடிவை விரைவில் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்பதை உணருங்கள்.

இப்படி உங்களுக்கு நெருக்கமான ஒருவரிடம் உச்சகட்ட மன அழுத்தத்திற்கான அறிகுறி தென்பட்டால், அவருக்கு நீங்கள் எப்படி முதலுதவி செய்யவேண்டும் தெரியுமா?

முதல் வேலையாக அவர் மீது நீங்கள் அக்கறை கொள்ளுங்கள். உங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருந்தாலும் அவருக்காக உங்கள் நேரத்தை ஒதுக்க முன்வாருங்கள். ‘உனக்காக நான் இருக்கிறேன். என்ன ஆனாலும் நான் உனக்கு துணையிருப்பேன்’ என்று கூறி, அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாகுங்கள். அவரது நம்பிக்கையை நீங்கள் பெற்றுவிட்டால், அவர் வாழ்க்கையில் விரக்தியடைய என்ன காரணம் என்பதை உங்களிடம் சொல்ல முன்வந்துவிடுவார். அவருக்கு இன்னொரு நபரால் பிரச்சினை என்றால், அந்த இன்னொரு நபரிடமும் பேசி, இவரது நிலைமையை புரியவையுங்கள். இந்த நடவடிக்கைகள் கைகூடினாலே அவர் தற்கொலை போன்ற ஆபத்தான முயற்சிகளை தள்ளிப்போடத் தொடங்கிவிடுவார். அவர் ஓரளவு தெளிவடைந்துவிட்டாலே உங்கள் முதலுதவி பயன் தரத் தொடங்கிவிட்டது என்பதை உணருங்கள். பின்பு அவரிடம் பக்குவமாகப் பேசி, மனோதத்துவ நிபுணரின் கவுன்சலிங்குக்கு வழிகாட்டுங்கள்.

மனதுக்கு முதலுதவி செய்பவர்கள் அதிக உரிமை எடுத்துக்கொண்டு, ஒரு போதும் பாதிக்கப்பட்டவரின் மனம்நோகும்படி நடந்துகொள்ளக்கூடாது. தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஒருவர் காப்பாற்றப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரிடம் போய், ‘ஏன் இப்படி ஒரு தவறான முடிவை எடுத்தாய்? உன்னால் நாங்கள் அவமானப்படுகிறோம்..’ என்பது போல் குற்றஞ்சாட்டவோ, விமர்சனம் செய்யவோகூடாது. அதுபோல் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான் இதுபோன்ற முடிவுகளை எடுப்பார்கள் என்றும் தவறாக கருதிவிடக்கூடாது.

மனஅழுத்தத்தில் இருக்கும் ஒரு வருக்கு நீங்கள் நம்பிக்கையும், நல்லாதரவும், சரியான வழிகாட்டுதலும் வழங்கு வதுதான் முறையான முதலுதவி. அதை உங்களைச் சார்ந்தவர்களுக்கு வழங்க எப்போதும் தயாராக இருங்கள். இது காலத்தின் கட்டாயம்!

கட்டுரை: விஜயலட்சுமி பந்தையன்.

மேலும் செய்திகள்