சோனியாகாந்தி பிறந்தநாள் விழா: காங்கிரசார் தங்கத்தேர் இழுத்தனர்

சோனியாகாந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் தங்கத்தேர் இழுத்தனர். பல இடங்களில் ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Update: 2017-12-09 23:09 GMT

புதுச்சேரி,

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மணக்குளவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தங்கத்தேர் இழுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

இதில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, அனந்தராமன், பாலன், தனவேலு, தீப்பாய்ந்தான், விஜயவேணி, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி ரெயில் நிலையம் எதிரே உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. முல்லா வீதியில் உள்ள தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

லாஸ்பேட்டை சட்டமன்ற தொகுதி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்த விழாவில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவு மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்

ராஜ்பவன் தொகுதியில் நடந்த விழாவில் கட்சியின் விவசாய அணி துணைத்தலைவர் வேல்முருகன் தலைமையில் அஜந்தா சந்திப்பு அருகில் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில சிறப்பு அழைப்பாளர் பாஷிங்கம், குமரன், ராமதாஸ் நாயுடு, ஸ்ரீகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லித்தோப்பு தொகுதி சிக்னல் அருகில் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் தலைமையில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இந்திராநகர் தொகுதி மேட்டுப்பாளையத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

உப்பளம் தொகுதி வட்டார காங்கிரஸ் சார்பில் நேதாஜி நகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் மத்திய உணவு வழங்கப்பட்டது. அரியாங்குப்பம் தொகுதியில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர், மாநில துணைத்தலைவர் விநாயகமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காலாப்பட்டு தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் சிவாஜி சிலை அருகில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஷாஜகான் கலந்து கொண்டு உணவுப்பொட்டலங்களை வழங்கினார். முதலியார்பேட்டை தொகுதி வட்டார காங்கிரஸ் சார்பில் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானமும், இலவச சர்க்கரையும் வழங்கப்பட்டது. புதுவையில் உள்ள 30 தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி வட்டார காங்கிரஸ் சார்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மேலும் செய்திகள்