அரசு மருத்துவக்கல்லூரியில் சி.பி.ஐ. விசாரணை ஏன்? முதல்–அமைச்சர் நாராயணசாமி விளக்கம்
புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் சி.பி.ஐ. விசாரணை ஏன் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2010–ம் ஆண்டு முதல்–அமைச்சராக இருந்த ரங்கசாமி கொல்லைப்புற வழியாக கூட்டுறவு சங்கம் மூலம் விதிமுறைகளை மீறி 770 பேரை பணியில் அமர்த்தினார். அவர்களை பணிநிரந்தரம் செய்ய கோப்புகளை தயாரித்து கவர்னருக்கு அனுப்பினார். அப்போதைய கவர்னர் அதற்கு அனுமதி தர மறுத்து விட்டார். இதனால் அவர்களை பணிநிரந்தரம் செய்ய முடியவில்லை. இது குறித்து சி.பி.ஐ.க்கு புகார்கள் சென்றன.
இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கதிர்காமம் மருத்துவ கல்லூரியில் சோதனை நடத்தினர். கடந்த ஆட்சியில் கொல்லைப்புறமாக அரசு நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தி, அவைகளை நஷ்டம் ஏற்பட செய்தது குறித்து விசாரிக்க முன்னாள் தலைமை செயலாளர் விஜயன் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தகுழு அறிக்கை தாக்கல் செய்த பின்னர் அரசு முடிவு எடுக்கும்.
ஓகி புயலால் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஓகி புயலின்போது லட்சத்தீவில் கரை ஒதுங்கிய நரம்பை பகுதியை சேர்ந்த 5 மீனவர்கள் பத்திரமாக திரும்பி விட்டனர். இதே போல் ஓகி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து குஜராத்தில் கரை ஒதுங்கிய மீனவர்களை மீட்க அந்த மாநில அரசும், புதுச்சேரி அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் புதுச்சேரி திரும்பி வருகின்றனர்.
கவர்னருக்கு புகார் வந்தால் அதை அவர் அமைச்சருக்கு அனுப்ப வேண்டும். அமைச்சர், துறை செயலருக்கு அனுப்புவார். துறை செயலர் விசாரித்து அமைச்சருக்கு அறிக்கை தருவார். அதன்மீது அமைச்சர் நடவடிக்கை எடுப்பார். இது அமைச்சரின் அன்றாட நிர்வாகப்பணி. கவர்னர் தனக்கு வரும் புகாரின் மீது ஆய்வு செய்ய அதிகாரம இல்லை. அமைச்சரின் அன்றாட பணியில் தலையிடவும் அதிகாரம இல்லை. கோப்புகளுக்கு அனுமதி தராமல் திருப்பி அனுப்புவதும் தேக்கம்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.