கரையை சேதப்படுத்தி கால்வாயை அடைக்கும் பொதுப்பணித்துறையினர்

மானாமதுரையில் கால்வாயில் தண்ணீர் செல்லாமல் தடுப்பதற்காக அதிகாரிகள் வைகை ஆற்று கரையை சேதப்படுத்தி தடுப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

Update: 2017-12-09 23:30 GMT
மானாமதுரை,

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக கடந்த 5-ந்தேதி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் செல்கிறது. நாளை(திங்கட்கிழமை) வரை தண்ணீர் திறக்கப்படும் என்றும், அதன்பின்னர் நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையில் தண்ணீர் நேற்று மானாமதுரை வைகை ஆற்றிற்கு வந்தது. மதுரை விரகனூர் மதகு அணையில் இருந்து பார்த்திபனூர் மதகு அணை வரை தட்டான்குளம், மாரநாடு, கட்டிகுளம், குவளைவேலி, கானூர், கீழப்பசலை உள்ளிட்ட வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் உள்ளன. ஆற்றில் இருந்து இந்த கால்வாய்களில் தண்ணீர் செல்லாமல் இருக்க கால்வாய் முகப்பில் உள்ள ஷட்டர்கள் அடைக்கப்பட்டு பூட்டுகள் போடப்பட்டுள்ளன. இதுதவிர போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

ஆனால் கீழப்பசலை கால்வாய் ஷட்டர் பணிகள் நடந்து வருவதால் கால்வாய் முகப்பில் மணல் மூட்டைகள் மூலம் தடுப்புகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக வைகை ஆற்று கரையை சேதப்படுத்தி மணல் அள்ளி சாக்கு மூடைகள் தயாரித்து தண்ணீர் செல்லாமல் அடைத்து வருகின்றனர். வைகை அணையில் இருந்து 5-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முந்தைய நாளே அரசு அறிவித்துவிட்டது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போதிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் கடைசி நேரத்தில் மணல் மூட்டைகள் வைத்து தடுப்புகள் ஏற்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே பாதுகாப்பாக உள்ள கரையை உடைப்பதால் வரும் காலங்களில் கரையை எவ்வளவு பலப்படுத்தினாலும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், ஏற்கனவே இதுபோன்று தடுப்புகள் அமைத்த பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகளை அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டனர். விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து மணல் மூட்டைகளை அகற்றினோம். தற்போது கரையையே உடைத்து மணல் அள்ளி தடுப்புகள் ஏற்படுத்தி வருகின்றனர். தண்ணீர் நின்றவுடன் மீண்டும் கரையை பலப்படுத்தி தருவார்களா என்பது நிச்சயமல்ல என்றனர்.

மேலும் செய்திகள்