பல் மருத்துவ மாணவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு மக்கள் நீதிமன்றம் உத்தரவு

தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி படுகாயம் அடைந்த பல் மருத்துவ மாணவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2017-12-09 23:15 GMT
மதுரை,

மதுரை ஐகோர்ட்டில் நேற்று மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது. இதில் ஐகோர்ட்டு நீதிபதிகள் தலைமையிலான 6 அமர்வுகள் மொத்தம் 873 வழக்குகள் தீர்வு காண்பதற்காக பட்டியலிடப்பட்டன. நீதிபதி கல்யாணசுந்தரம் தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதி சடையாண்டி, வக்கீல் சாமித்துரை ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 155 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

இதில் தேனி மாவட்டம் முத்துத்தேவன்பட்டியை சேர்ந்த தனசேகரன் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், எங்கள் கிராமத்தில் மிகவும் தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் படுகாயம் அடைந்தேன். இதனால் பிளஸ்-2 பொதுத்தேர்வை உதவியாளரின் துணையுடன் எழுதினேன். தேர்வை சரியாக எழுத முடியாத நிலைக்கு ஆளானேன். பொது மருத்துவம் படிக்க வேண்டும் என்பது எனது லட்சியம். ஆனால் பிளஸ்-2 தேர்வில் போதுமான மதிப்பெண் பெறாததால் பல் மருத்துவப்படிப்பில் தான் இடம் கிடைத்தது. மின்வாரியத்துறையினரின் அலட்சியத்தால் எனது லட்சியம் நிறைவேறாமல் போனது. இதற்காக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை நீதிபதி கல்யாணசுந்தரம் தலைமையிலான அமர்வு விசாரித்தது. முடிவில் மனுதாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேபோல ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், நிஷாபானு, பவானிசுப்பராயன், ஜெகதீஷ்சந்திரா, தண்டபாணி ஆகியோர் தலைமையில் வக்கீல்கள் கணபதிசுப்பிரமணியன், ஜெயஇந்திராபட்டேல், கேத்தரின்எவி, கிருஷ்ணவேணி, ஜெயசிங் ஆகியோர் கொண்ட அமர்வுகள் மூலம் வழக்குகள் சுமுக தீர்வு காணப்பட்டன. முடிவில் மொத்தம் 122 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 44 லட்சம் வழங்கப்பட்டது.

இதேபோல மதுரை மாவட்ட கோர்ட்டில் முதன்மை நீதிபதி(பொறுப்பு) தீப்தி அறிவுநிதி தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் வங்கிக்கடன் நிலுவை தொடர்பான வழக்குகள், விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், கிரிமினல், தொழிலாளர் துறை தொடர்பானவை என்று மொத்தம் 22 ஆயிரத்து 529 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

முடிவில் 3 ஆயிரத்து 359 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதன்மூலம் பயனாளிகளுக்கு ரூ.15 கோடியே 98 லட்சத்து 92 ஆயிரத்து 265 வழங்கப்பட்டது. மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கணேசன், வேங்கடவரதன், சஞ்சய்பாபா, ராஜவேல், ஜெய்சிங், தங்கவேல், சரவணன் உள்பட நீதிபதிகளும், ஓய்வு பெற்ற நீதிபதி பொன்னுச்சாமி மற்றும் வக்கீல்களும் பங்கேற்றனர்.

மேலூர் கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்ட உரிமையியல் நீதிபதி சுரேஷ், ஓய்வுபெற்ற நீதிபதி மாயாண்டி, சார்பு நீதிமன்ற நீதிபதி சந்திரன், மாஜிஸ்திரேட்டு பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 168 வழக்குகள் பரிசீலனை செய்யப்பட்டு 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 7 லட்சம் ரூபாய் தீர்வு தொகையாகவும், 77 ஆயிரம் ரூபாய் அபராதமாகவும் வசூலிக்கப்பட்டது.

இதுதவிர பல்வேறு வங்கிகள் தொடர்ந்த 900 வழக்குகளில் 79 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 7 லட்சத்து 51 ஆயிரத்து 133 ரூபாயை பல தவணைகளாக திரும்ப வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்