கார்வாரில், பா.ஜனதா பிரமுகர் கொலை குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

பெங்களூரு மல்லேசுவரத்தில் பா.ஜனதா அலுவலகத்தில் நேற்று ஷோபா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Update: 2017-12-09 21:30 GMT

பெங்களூரு,

பெங்களூரு மல்லேசுவரத்தில் பா.ஜனதா அலுவலகத்தில் நேற்று ஷோபா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் கொலை செய்யப்படுவதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மாநில அரசும், போலீஸ் துறையும் முற்றிலும் தவறி விட்டது. மாநிலத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு பாதுகாப்பு இல்லை. இந்த நிலையில், கார்வார் மாவட்டம் ஹொன்னாவரை சேர்ந்த பா.ஜனதா கட்சியின் பிரமுகரான பரேஷ் மேஸ்தாவை மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்திருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. பரேஷ் மேஸ்தாவை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ருத்ரேஷ் கொலை குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்திய பின்பே, கொலையாளிகள் கைது செய்யப்பட்டார்கள். அதுபோல, பரேஷ் மேஸ்தா கொலை குறித்தும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட வேண்டும். ஓட்டு வங்கி அரசியலுக்காக பா.ஜனதாவினர் மீது நடக்கும் தாக்குதல்கள், கொலைகளை கண்டு கொள்ளாமல் சித்தராமையா இருந்து வருகிறார். அவருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்