மின்தகன மேடையை சீரமைக்கக்கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம் வேளச்சேரியில் 50 பேர் கைது

வேளச்சேரி மின்தகன மேடையை சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜனதா கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-12-09 23:15 GMT
ஆலந்தூர்,

சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட வேளச்சேரி மயானத்தில் மின்தகன மேடை அமைக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. 6 மாதங்களுக்கு முன் அந்த மின்தகன மேடை 
பழுதடைந்துவிட்டது. இந்த மயானத்திற்கு வரும் உடல்கள் வேறு சுடுகாடுகளுக்கு அனுப்பப்படுவதால் அப்பகுதியினர் அவதிப்பட்டு வந்தனர். 

மின்தகன மேடையை மாநகராட்சி சீரமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை கடந்த 6–ந்தேதி தினத்தந்தியில் செய்தியாக வெளியானது. இதையடுத்து வேளச்சேரி மண்டல பாரதீய ஜனதா கட்சி சார்பில் வேளச்சேரி மின்தகன மேடையை சீரமைக்கவும், தற்காலிகமாக மூடப்பட்டதை உடனடியாக திறக்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

50 பேர் கைது

இதில் பாரதீய ஜனதா
கட்சியின் மாவட்ட தலைவர் ஸ்ரீதரன், மண்டல தலைவர் திருப்புகழ் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு மாநகராட்சியை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர். அப்போது அங்குவந்த கிண்டி போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என்பதால் கலைந்து செல்லும்படி கூறினர். 

ஆனாலும் ஆர்ப்பாட்டம் நடந்ததால் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கிண்டி மடுவின்கரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைத்து, மாலையில் விடுவித்தனர்.

மேலும் செய்திகள்