நெல்லை அரசு மருத்துவமனையில் கருப்பு பலூன்களை பறக்க விட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டம்
நெல்லை அரசு மருத்துவமனையில், கருப்பு பலூன்களை பறக்க விட்டு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்
நெல்லை,
நெல்லை அரசு மருத்துவமனையில், கருப்பு பலூன்களை பறக்க விட்டு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
கருப்பு பலூன்களை பறக்க விட்டு போராட்டம்நெல்லை அரசு மருத்துவமனையில் பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவ– மாணவிகள் கடந்த 28–ந் தேதி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 12–வது நாளாக பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவ– மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் எட்வின் கிங்ஸ் ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பசுபதி முன்னிலை வகித்தார். நேற்றைய போராட்டத்தின்போது மாணவ– மாணவிகள் கருப்பு பலூன்களை பறக்க விட்டு போராட்டம் நடத்தினர். ஒவ்வொரு மாணவ– மாணவியும் தனித்தனியாக பலூன்களை பறக்க விட்டனர்.
கோரிக்கைகள்தமிழக அரசு மருத்துவமனைகளில் 550 டாக்டர்கள் நியமனத்தில் அரசு ஏற்கனவே அறிவித்த நடைமுறையை பின்பற்றவில்லை. எனவே இந்த பணி நியமனத்தை ரத்து செய்து, அந்த பணியிடத்தில் அரசு டாக்டர்களை நியமிக்க வேண்டும். பதிவுமூப்பு அடிப்படையில் டாக்டர்களை பணியமர்த்த வேண்டும். புதிதாக நியமிக்கப்படும் டாக்டர்களுக்கு கிராமப்புற சேவையை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.
நேற்று நடந்த போராட்டத்தின்போது மாணவர்கள் கூறும்போது, ‘12–வது நாளாக பேராட்டம் நடத்துகிறோம். சுகாதார துணை செயலாளர் எங்களை அழைத்து பேசுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படியில்லையென்றால், மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் கலந்து பேசி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்‘ என்றனர். இந்த போராட்டத்தில் திரளான பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.