தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–
கல்வி உதவித்தொகைதூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவ– மாணவிகள் 2017–18–ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வி ஆண்டிற்கு 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.1,000–ம், 5–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரமும், 9–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.4 ஆயிரமும், பட்டப்படிப்பு படித்துவரும் மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரமும், தொழிற்கல்வி படித்து வரும் மாணவர்களுக்கு ரூ.7 ஆயிரமும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் பார்வையற்றோருக்கான 9–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை படிக்கும் மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகையாக ரூ.3 ஆயிரமும், இளங்கலை பட்டம் படிப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், பட்டப்படிப்பு படித்து வரும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரமும் வாசிப்பாளர் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
31–ந் தேதி கடைசி நாள்இந்த கல்வி உதவித்தொகையை பெற, விண்ணப்பதாரர்கள் தங்களின் தேசிய அடையாள அட்டை, 9–ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிப்பவர்கள் கடந்த கல்வியாண்டு இறுதித்தேர்வில் அனைத்து பாடங்களிலும் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றதற்கான சான்று, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த கல்வி உதவித்தொகை பெற 2017–18–ம் நிதியாண்டில் இதுவரை விண்ணப்பிக்காத தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தகுதியானவர்கள். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 31–ந் தேதி கடைசி நாளாகும். மேலும் தகவலுக்கு 0461–2340626 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.