ஒகி புயலால் ஆழ்கடலில் தத்தளித்த 27 மீனவர்கள் தேங்காப்பட்டணத்தில் கரை சேர்ந்தனர்

ஒகி புயலால் ஆழ்கடலில் தத்தளித்த 27 மீனவர்கள் தேங்காப்பட்டணம் கடற்கரையில் கரை சேர்ந்தனர்.

Update: 2017-12-09 23:15 GMT

களியக்காவிளை,

ஒகி புயலால் ஆழ்கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க கோரி குமரி மாவட்டம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்தநிலையில் புயலில் சிக்கி ஆழ்கடலில் தவித்த 27 மீனவர்கள் நேற்று தேங்காப்பட்டணத்தில் கரை ஒதுங்கினர். இதுகுறித்த விவரம் வருமாறு:–

குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த ராயப்பன், ஆண்டனி, ஜெர்சன், ஜார்சன், ஜாண் போஸ்கோ, கிர்பின், ஜெபராஜ், பிரிட்டோ ஆகியோரும், நாகப்பட்டணம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் உள்பட 27 மீனவர்கள் கடந்த மாதம் கேரள மாநிலத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, கடந்த 30–ந் தேதி ஒகி புயல் வீசியது. இதில் இவர்களது படகு மராட்டிய மாநிலத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதற்கிடையே படகில் இருந்த டீசல் தீர்ந்தது. இதனால், கரை திரும்ப முடியாமல் ஆழ்கடலில் படகுடன் தத்தளித்தனர். மேலும், படகில் இருந்த உணவு தீர்ந்ததால் மிகவும் அவதியடைந்தனர். பின்னர், அந்த வழியாக சென்ற சக மீனவர்களிடம் இருந்து டீசல் உதவியாக பெற்று நேற்று தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் கரை சேர்ந்தனர்.

மீனவர்கள் கரை சேர்ந்த விவரம் அறிந்ததும் உறவினர்கள் தேங்காப்பட்டணத்தில் குவிந்தனர். அவர்கள் கரை சேர்ந்த மீனவர்களை கண்ணீர் மல்க அழைத்து சென்றனர்.

கரை சேர்ந்த மீனவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து கூறியதாவது:–

நாங்கள் கடந்த மாதம் 6–ந் தேதி கேரள மாநிலத்தில் இருந்து கடலுக்கு சென்று விட்டோம். ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 30–ந் தேதி ஒகி புயலில் சிக்கிக் கொண்டோம்.

இதில் எங்களின் படகு மராட்டிய மாநிலம் ரத்தினகிரி அருகே இழுத்துச் செல்லப்பட்டது. துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கேட்டபோது, அங்குள்ள அதிகாரிகள் மறுத்து விட்டனர். எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

இதனால் கடலுக்குள்ளேயே உணவின்றி தவித்தப்படி இருந்தோம். படகில் டீசல் தீர்ந்ததால் கரைக்கு திரும்ப முடியவில்லை. இதற்கிடையே கடல் காற்று எங்களை கோவா கடல் பகுதிக்கு இழுத்துச் சென்றது. அப்போது அந்த வழியாக சில மீனவர் படகுகளில் சென்றன. அவர்களிடம் எங்களின் நிலையை கூறி உதவி கேட்டோம். அவர்களும் எங்கள் மீது பரிவு கொண்டு டீசல் கொடுத்து உதவினர். இதையடுத்து கரை வந்து சேர்ந்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்