வருகிற 15–ந் தேதி ஜனதா தளம்(எஸ்) கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு குமாரசாமி அறிவிப்பு

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வருகிற 15–ந் தேதி வெளியிடப்படும் என்று குமாரசாமி அறிவித்து உள்ளார்.

Update: 2017-12-08 21:30 GMT

பெங்களூரு,

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வருகிற 15–ந் தேதி வெளியிடப்படும் என்று குமாரசாமி அறிவித்து உள்ளார்.

ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:–

சித்தராமையா கட்சி பிரசாரம்

மக்களின் வரிப்பணத்தில் அரசு நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் தேர்தல் பிரசாரம் செய்ய சித்தராமையா முடிவு செய்துள்ளார். இது சரியல்ல. சித்தராமையா பதவி ஏற்று 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதுவரை அவர் வட கர்நாடக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த பகுதியில் சுற்றுப்பயணமும் செய்யவில்லை. இப்போது சட்டசபை தேர்தல் நெருங்குவதால் அவருக்கு வட கர்நாடகம் மீது திடீரென அக்கறை வந்துவிட்டது.

அரசு நிகழ்ச்சி என்று கூறி சித்தராமையா கட்சி பிரசாரம் செய்கிறார். சித்தராமையா மற்றும் பரமேஸ்வர் தேர்தல் சுற்றுப்பயணத்தை தனித்தனியாக மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் மேலிடம் கூறியுள்ளது. பரமேஸ்வருக்கு பழுதாகியுள்ள பஸ்சை நிர்வகிக்கும் பணியையும், சித்தராமையாவுக்கு நன்றாக ஓடும் பஸ்சை நிர்வகிக்கும் பணியையும் காங்கிரஸ் மேலிடம் வழங்கியுள்ளது.

ஆதிதிராவிடர்கள் மாநாடு

எங்கள் கட்சியில் முன்பு ‘சூட்கேஸ்‘ கலாசாரம் இருந்தது. இப்போது அந்த கலாசாரம் போய்விட்டது. அந்த கலாசாரத்தில் ஈடுபட்டவர்கள் எங்கள் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். முதல் முறையாக துமகூருவில் எங்கள் கட்சியின் சிறுபான்மையினர் மாநாடு வருகிற 10–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.

இந்த மாநாட்டை தொடர்ந்து ராய்ச்சூரில் ஒரு மாநாடு நடத்தப்படுகிறது. பெங்களூருவில் வருகிற 13–ந் தேதி ஆதிதிராவிடர்கள் மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். விஜயாப்புராவில் ஜனவரி மாதம் பெரிய அளவில் விவசாயிகள் மாநாடு நடத்துகிறோம். ஜனவரி மாதம் 9–ந் தேதி மங்களூருவில் ஜனதா தளம்(எஸ்) சகோதரத்துவத்தை நோக்கி என்ற பெயரில் நடைபயணம் நடத்த உள்ளோம்.

15–ந் தேதி வேட்பாளர் பட்டியல்

நாங்கள் இப்படி தொடர்ந்து கட்சி மாநாடுகளை நடத்துகிறோம். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்கிறோம். எங்கள் கட்சியின் மாநாடுகளில் கர்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் அரசுகள் என்ன செய்தது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவோம். தனிப்பட்ட முறையில் யாரையும் நாங்கள் குறை கூறமாட்டோம்.

சட்டசபை தேர்தலில் நாங்கள் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம். நாங்கள் ‘கிங் மேக்கர்‘ அல்ல, ‘கிங்‘ ஆவோம். ராமநகர் எனது கர்ம பூமி. அதனால் ராமநகர் தொகுதியில் நான் போட்டியிடுவேன். சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை வருகிற 15–ந்தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம். துமகூரு மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவிப்பேன்.

நான் கவலைப்படவில்லை

எங்கள் கட்சிக்கு வருமாறு யாருக்கும் அழைப்பு விடுக்க மாட்டோம். வருபவர்களை நாங்கள் வேண்டாம் என்று சொல்ல மாட்டோம். ஜமீர்அகமது கான் பற்றி பேச விரும்பவில்லை. அவர் எங்கள் கட்சியை தோற்கடிப்பதாக கூறிக்கொண்டு சுற்றுகிறார். அதை பற்றி நான் கவலைப்படவில்லை.

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் பிரச்சினை உள்பட மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் கடினமான சூழ்நிலை ஏற்படும். அதனால் ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும். எங்கள் கட்சியால் மட்டுமே நல்ல திட்டங்களை அமல்படுத்த முடியும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்