ஜனதா தளம்(எஸ்) ஆட்சிக்கு வந்தால் இலவச அரிசி திட்டத்தை நிறுத்தி விடுவார்கள் சித்தராமையா கடும் தாக்கு

ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவச அரிசி திட்டத்தை நிறுத்தி விடுவார்கள் என்றும் முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

Update: 2017-12-08 21:30 GMT

மைசூரு,

தேவேகவுடா மக்களுக்கு எதிரான போக்கில் பேசி வருவதாகவும், ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவச அரிசி திட்டத்தை நிறுத்தி விடுவார்கள் என்றும் முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

முதல்–மந்திரி சித்தராமையா

மைசூருவில் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மைசூருவுக்கு வந்தார். மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை வந்தடைந்த அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;–

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2018) சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு ஊடகங்கள், செய்தி தொலைக்காட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் வெற்றிபெறும் என்று கருத்து கணிப்பு நடத்தி கூறிவருகிறார்கள். இது முழுக்க, முழுக்க நம்பகத்தன்மை அற்றது. இதை யாரும் நம்ப வேண்டாம்.

உஷாராகி விடுவார்கள்

எதிர்க்கட்சியினர் தங்கள் இஷ்டத்திற்கு நிறைய பேசுவார்கள். தாங்கள்தான் அதிக தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று கூறுவார்கள். ஆனால் நாங்கள்(காங்கிரசார்) அப்படி அல்ல. நாங்களும் இதுவரை முதல்கட்ட கருத்து கணிப்பை நடத்தி முடித்துள்ளோம். 2–வது கட்ட கருத்துக் கணிப்பை நடத்த இருக்கிறோம்.

எவ்வளவு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்பது எங்களுக்கு தெரியும். அந்த கருத்து கணிப்பை நாங்கள் வெளியிட மாட்டோம். அதை வெளியிட்டால் எதிர்க்கட்சியினர் உஷாராகி விடுவார்கள்.

காங்கிரசின் பண்பாடு

பா.ஜனதாவினருக்கு கலாசாரம், பண்பாடு என்று எதுவுமே தெரியாது. தங்கள் வாய்க்கு வந்தபடி பேசுவார்கள். பா.ஜனதா தலைவர்களான எடியூரப்பா, அனந்தகுமார் ஹெக்டே, பிரதாப் சிம்ஹா, ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட பலர் அவதூறான பேச்சுகளை பேசி வருகிறார்கள். அவர்களைப் போன்று காங்கிரசார் என்றைக்குமே பேசமாட்டார்கள்.

மணிசங்கர் அய்யர், பிரதமர் நரேந்திர மோடி குறித்து விமர்சித்து பேசியதற்காக அவரை கட்சியில் இருந்து நீக்கியது காங்கிரஸ். இதுதான் காங்கிரசின் பண்பாடு. இதை அவர்களும் புரிந்து கொண்டு பின்பற்ற வேண்டும்.

பா.ஜனதாவினர்தான் காரணம்

உன்சூரில், அனுமன் ஜெயந்தி விழாவின்போது ஏற்பட்ட கலவரத்திற்கு பா.ஜனதாவினர்தான் காரணம். கடந்த 3 வருடங்களாக உன்சூரில் அனுமன் ஜெயந்தி விழாவின்போது பதற்றம் ஏற்படுவதால், சட்டம்–ஒழுங்கு பிரச்சினையை தடுப்பதற்காக போலீசார் தனி வழி அமைத்து கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் பிரதாப் சிம்ஹா அடம்பிடித்து போலீசார் அனுமதிக்காத வழியில் ஊர்வலம் சென்று பிரச்சினையை கிளப்பி விட்டுள்ளார். அவர் அப்படி செயல்பட்டதால்தான் அங்கு கலவரம் ஏற்பட்டது. சட்டத்தை மதிக்க வேண்டிய ஒரு அரசியல் தலைவரே இப்படி நடந்து கொள்ளலாமா?.

திட்டங்களை நிறுத்தி விடுவார்கள்

கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச அரிசி, மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பால் உள்பட பல்வேறு திட்டங்கள், சலுகைகளை அவர்கள் நிறுத்தி விடுவார்கள். எடியூரப்பா, குமாரசாமி ஆகியோர் என்ன செய்தாலும் அவர்களால் முதல்–மந்திரி ஆக முடியாது.

அதேபோல் முன்னாள் பிரதமர் தேவேகவுடா மக்களுக்கு எதிரான போக்கில் பேசி வருகிறார். இப்படி பேசினால் அவரை யாராவது ஏற்றுக் கொள்வார்களா?.

இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா கூறினார். பேட்டியின்போது முதல்–மந்திரியுடன் மந்திரி எச்.சி.மகாதேவப்பா, துருவநாராயண் எம்.பி. ஆகியோர் இருந்தனர்.

மேலும் செய்திகள்