சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த மராட்டிய வாலிபர்கள் உள்பட 3 பேர் கைது மற்றொருவரை போலீஸ் தேடுகிறது
சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த மராட்டியத்தை சேர்ந்த வாலிபர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
உப்பள்ளி,
சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த மராட்டியத்தை சேர்ந்த வாலிபர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தங்கச்சங்கிலி பறிப்புதார்வார் டவுன் போலீசார் சவதத்தி–தார்வார் சாலையில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த சாலையில் வந்த ஒரு காரை மறித்து டிரைவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதாக தெரிகிறது. அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ரசூலி(வயது 30) என்பதும், அவரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தங்கச்சங்கிலிகளை பறித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அவர் மீது ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் கஞ்சா கடத்தல், சங்கிலி பறிப்பு போன்ற வழக்குகள் பதிவாகி உள்ளது தெரியவந்தது.
மேலும் 2 பேர் கைதுஇதையடுத்து போலீசாரிடம் அவர் கொடுத்த தகவலின்பேரில், அவருடன் சேர்ந்து நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்த தாவணகெரே மாவட்டம் ஹரியாரை சேர்ந்த சையத்(28), மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் உமலவாடா கிராமத்தை சேர்ந்த மகேஷ்(28) ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 197 கிராம் தங்கச்சங்கிலிகள், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தலைமறைவாகி உள்ள ரசூலியின் நண்பர் ஹைதரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பல்வேறு சங்கிலி பறிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 3 பேரை கைது செய்த போலீசாருக்கு தலா ரூ.10 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் என்று தார்வார் மாவட்ட போலீஸ் கமிஷனர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.