திருச்செந்தூர் அருகே பெண்ணிடம் 5¼ பவுன் தங்க தாலி சங்கிலி பறிப்பு மர்மநபர்கள் கைவரிசை

திருச்செந்தூர் அருகே, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், சாலையோரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 5¼ பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

Update: 2017-12-08 20:30 GMT

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், சாலையோரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 5¼ பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர். அந்த மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு

திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினம் ஏசுராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேசு பல்டான் (வயது 45). இவர் வெளிநாட்டில் மீன்பிடி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சகாய அரசி (38). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலையில் சகாய அரசி, அங்குள்ள மாதா கெபி அருகில் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று அவருடைய கழுத்தில் கிடந்த 5¼ பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்தனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ‘திருடன் திருடன்‘ என்று கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள், மர்மநபர்கள் அவரிடம் வழிப்பறி செய்த நகையுடன் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்