ஒகி புயல் பாதிப்பு தொடர்பாக உண்மை கண்டறியும் குழு ஆய்வு செய்ய முடிவு
ஒகி புயல் பாதிப்பு தொடர்பாக உண்மை கண்டறியும் குழு ஆய்வு செய்ய முடிவு தேசிய மீனவர் பேரவை தகவல்.
புதுச்சேரி,
ஒகி புயல் தாக்கியதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உண்மை கண்டறியும் குழு ஆய்வு செய்ய உள்ளதாக தேசிய மீனவர் பேரவை தெரிவித்துள்ளது.
தேசிய மீனவர் பேரவையின் புதுவை மாநில தலைவர் இளங்கோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கிய ஒகி புயல் ஒட்டுமொத்த மாவட்ட மீனவர்களையும் நிலைகுலையச் செய்துள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை இதுவரை கணக்கிட முடியவில்லை. உயிரோடு பல மாநிலங்களில், பல தூர நாடுகளில், தீவுகளில் தஞ்சம் அடைந்தோர் விவரமும் இதுவரை கணக்கிட முடியவில்லை.
பாதிக்கப்பட்ட மீனவர்கள், வீடுகள், படகுகள் விவரம் சரிவர கிடைக்கவில்லை. இந்த புயலுக்கு முன்னும் பின்னும், புயல் தாக்கிய நேரத்திலும், புயலுக்கு பின்னரும் அரசும், மற்றவர்களும் இழைத்த தவறுகள் யாவை
அவைகளில் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன? உடனடி மீட்பு நடவடிக்கைகள் சரியாக நடந்ததா? தற்காலிக மற்றும் நிரந்தர நிவாரணங்கள் என்ன மேற்கொள்ள வேண்டும்? பேரிடர்களின்போது ஆழ்கடல் மீனவர்கள், அண்மைக்கடல் மீனவர்கள் காப்பாற்றப்படுவது எவ்வாறு? அதற்கு எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பனவற்றை நேரில் கண்டறிந்து கள நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்து அவைகள் குறித்து மத்திய மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க தேசிய மீனவர் பேரவை உத்தேசித்துள்ளது.
அதற்கான உண்மை கண்டறியும் குழுவில் தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ, மூத்த ஆலோசகர்கள் ஆண்டன் கோமஸ், அருளானந்தம், தேசிய மீனவர் பேரவையின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பாரதி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வக்கீல்கள், சமுதாய தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு நாளை (சனிக்கிழமை) முதல் 11–ந்தேதி வரை 3 நாட்கள் கன்னியாகுமரி மாவட்ட கிராமங்களில் மீனவர்கள், தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து விவரங்களை சேகரிப்பார்கள். ஒரு வாரத்திற்குள் மத்திய, மாநில அரசுகளிடம் அறிக்கை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.