சிக்னல் கம்பத்தில் ஏறி நின்று ரெயில் பயணியிடம் செல்போன் பறித்தவருக்கு 3 ஆண்டு ஜெயில்

சிக்னல் கம்பத்தில் ஏறி நின்று ரெயில் பயணியிடம் செல்போனை பறித்தவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2017-12-07 22:00 GMT

மும்பை,

சிக்னல் கம்பத்தில் ஏறி நின்று ரெயில் பயணியிடம் செல்போனை பறித்தவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

செல்போன் பறிப்பு

நவிமும்பை நெருல் பகுதியை சேர்ந்தவர் முகமது நயீம். இவர் கடந்த மார்ச் மாதம் 17–ந்தேதி தாதரில் இருந்து அந்தேரிக்கு மின்சார ரெயிலில் சென்றார். மின்சார ரெயில் கார் ரெயில்நிலையம் அருகே சென்று கொண்டு இருந்தபோது, முகமது நயீம் வாசல்படியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது தண்டவாளம் ஓரம் இருந்த சிக்னல் கம்பத்தில் ஏறிநின்ற வாலிபர் ஒருவர், முகமது நயீமின் செல்போனை பறிப்பதற்காக அவரது கையை தட்டிவிட்டு, கீழே விழுந்த அவரது செல்போனை எடுத்து கொண்டு ஓடிவிட்டார்.

3 ஆண்டு ஜெயில்

இந்த சம்பவம் குறித்து முகமது நயீம் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது நயீமின் செல்போனை பறித்த ரோகித்(வயது21) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையின் போது ரோகித் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபணமானது.

இந்தநிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்து நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, குற்றவாளி ரோகித்திற்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

மேலும் செய்திகள்