சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டம்

விருத்தாசலம் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2017-12-07 22:15 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள ஆலிச்சிக்குடி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஓடையின் குறுக்கே போக்குவரத்து வசதிக்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் முறையான பராமரிப்பின்றி இந்த தரைப்பாலம் சேதமடைந்தது.

இதையடுத்து அதே பகுதியில் புதிதாக தரைப்பாலம் அமைக்கும் பணி நடந்து வந்தது. மேலும் போக்குவரத்து வசதிக்காக அருகிலேயே தற்காலிகமாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு அதில் வாகனங்கள் சென்று வந்தன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அந்த ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மாற்றுப்பாதை சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதையடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி, மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமையில் ஆலிச்சிக்குடி கிராம மக்கள் நேற்று நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்