சோழிங்கநல்லூரில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய தொழிலாளியால் பரபரப்பு
சோழிங்கநல்லூரில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கி வர வைத்தனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பினர்.
சோழிங்கநல்லூர்,
சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சாலையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ள நுழைவுவாயில் அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் ஒருவர் இந்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறினார். இது குறித்து அங்கு இருந்தவர்கள் செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரிடம் கீழே இறங்கி வருமாறு பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடும்பத்தகராறு காரணமாக டிரான்ஸ்பார்மர் மீது ஏறியதாக கூறி அவர் கீழே இறங்க மறுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மனைவியுடன் தகராறு
இதுகுறித்து உடனடியாக துரைப்பாக்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்தனர். அந்த நபரிடம் போலீசார் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த நபரை மீட்டனர். விசாரணையில் அவர் பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த தொழிலாளி அண்ணாமலை (வயது 47) என்பதும், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மது குடித்துவிட்டு டிரான்ஸ்பார்மர் மீது ஏறியதும் தெரியவந்தது. இதையடுத்து அண்ணாமலையின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் அங்கு வரவழைக்கப்பட்டார்.
பின்னர் போலீசார் அண்ணாமலையை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.