பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சின்னாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

சின்னாறு அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,260 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

Update: 2017-12-07 22:45 GMT
பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா பஞ்சப்பள்ளியில் உள்ள சின்னாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி சின்னாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்து மதகுகள் வழியாக அணை தண்ணீர் வெளியே செல்லும் கால்வாயில் மலர் தூவினார்.

சின்னாறு அணையில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி வீதம் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு முறைவைத்தும், வருகிற ஜனவரி மாதம் 19-ந்தேதி முதல் பழைய ஆயக்கட்டு பாசன பரப்பிற்கு ஒருமுறையும் என மொத்தம் 444.14 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. பழைய ஆயக்கட்டு பகுதியில் 5 ஏரிகளுக்கு ஆற்றின் வழியாக ஜனவரி மாதம் 19-ந்தேதி முதல் ஒரு முறை தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, சாமனூர், அத்திமுட்லு, மாரண்டஅள்ளி, குஜ்ஜாரஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்தலாவ், பாலக்கோடு, எர்ரனஅள்ளி, பேகாரஅள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த மொத்தம் 3,260 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

அதிக விளைச்சல்

தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் கலெக்டர் விவேகானந்தன் கூறுகையில், முதல்-அமைச்சர் உத்தரவுப்படி சின்னாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பொதுப்பணித்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தியும், நீர்மேலாண்மையை மேற்கொண்டும் அதிக விளைச்சலை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி.ரங்கநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தொ.மு.நாகராஜன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல், உதவி பொறியாளர்கள் வெங்கடேஷ், சாம்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகேசன், தாசில்தார் அருண்பிரசாத் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்