செங்கம் அருகே கழிவுநீர் கால்வாயில் விழுந்து 2 வயது குழந்தை சாவு

செங்கம் அருகே கழிவுநீர் கால்வாயில் விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2017-12-07 22:45 GMT
செங்கம்,

செங்கத்தை அடுத்த பக்கிரிப்பாளையத்தை சேர்ந்த தொழிலாளி ஆனந்தன். இவருடைய மகன் சஞ்ஜித் (வயது 2). நேற்று சஞ்ஜித் வீட்டின் முன்பகுதியில் விளையாடி கொண்டிருந்தான். ஆனந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் உள்ளே பேசிக்கொண்டிருந்தனர். விளையாடிக் கொண்டிருந்த சஞ்ஜித் வெகு நேரமாகியும் வீட்டின் உள்ளே வரவில்லை.

அதனால் சந்தேகம் அடைந்த ஆனந்தன் வெளியே வந்து சஞ்ஜித்தை தேடிப்பார்த்தார். ஆனால் அங்கு அவனை காணவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே மற்றும் வெளியே தேடியும் காணவில்லை.

அதைத்தொடர்ந்து ஆனந்தன் மற்றும் குடும்பத்தினர் அருகே உள்ள வீடுகளில் தேடிப்பார்த்தனர். அப்போது வீட்டின் அருகேயுள்ள கழிவுநீர் கால்வாயில் சஞ்ஜித் மூழ்கிய நிலையில் கிடந்தான். ஆனந்தன் சஞ்ஜித்தை மீட்டு உடனடியாக செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறினார்கள். அதைக்கேட்டு ஆனந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதுதொடர்பாக செங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கால்வாயில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அக்குடும்பம் மற்றும் பக்கிரிப்பாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பக்கிரிப்பாளையத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை ஊராட்சி நிர்வாகம் முறையாக தூர்வாருவது கிடையாது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுநீர் கால்வாய்களை முறையாக தூர்வாரி இருந்தால் கால்வாயில் குறைந்த அளவே கழிவுநீர் தேங்கியிருக்கும். அதனால் குழந்தை உயிரிழப்பதற்கான வாய்ப்பு குறைவாகும். கழிவுநீர் கால்வாய்களை ஊராட்சி நிர்வாகம் தூர்வாராததே குழந்தை உயிரிழப்புக்கு காரணம் என பொது மக்கள் குற்றம் சாட்டினார்கள். 

மேலும் செய்திகள்