கழிவுநீரில் அடித்து செல்லப்பட்டு தொழிலாளி பரிதாப சாவு

கோவையில் பாதாள சாக்கடைக்குள் இறங்கி தங்க துகள்கள் சேகரித்தபோது கழிவுநீரில் அடித்துச்செல்லப்பட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-12-07 23:00 GMT
கோவை,

கோவை சலீவன் வீதி, இடையர் வீதி சந்திப்பு பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு மாநகராட்சி ஊழியர்கள் லாரி மூலம் கழிவுநீரை அகற்றி குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாக்கடை கால்வாயில் இருந்து வழக்கத்துக்கு மாறாக கடுமையான துர்நாற்றம் வீசியது.

எனவே அதற்குள் கால்நடைகள் ஏதாவது உள்ளே விழுந்து இறந்து கிடக்கலாம் என்று ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே அவர்கள் பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி தேடியபோது அங்கு அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. உடனே ஊழியர்கள் இதுகுறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அதில், பிணமாக கிடந்தவர் கோவை உக்கடம் சி.எம்.சி. காலனியை சேர்ந்த அருணாச்சலம் (வயது 42) என்பதும், தொழிலாளியான இவர் சாக் கடைக்குள் தங்க துகள்கள் சேகரித்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும் அவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சலீவன் வீதியில் உள்ள ஒரு பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி, அதில் உள்ள மண்ணை அரித்து தங்க துகள்கள் இருக்கிறதா? என்று தேடும்போது, திடீரென்று கழிவுநீர் அதிகமாக வந்து அவரை அடித்துச்சென்றதும், அதில் சிக்கி அருணாச்சலம் பரிதாபமாக இறந்துபோனதும் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்