கூட்டுறவு சர்க்கரை ஆலை விவகாரம்: தனியாருக்கு தாரை வார்க்க கூடாது விவசாயிகள் திட்டவட்டம்
புதுவை அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை விவகாரத்தில் தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி,
புதுவை மாநிலம் லிங்காரெட்டிப்பாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு புதுவை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், புதுவையை அடுத்துள்ள தமிழகப் பகுதிகளில் இருந்தும் கரும்பு விவசாயிகள் அரவைக்கு கரும்புகள் அனுப்புவார்கள். இங்கு வழக்கமாக நவம்பர் மாதத்தில் அரவைப்பணித்தொடங்கும். ஆனால் தற்போது வரை அரவைப்பணி தொடங்கவில்லை.
புதுவை அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை நஷ்டத்தில் இயங்குவதால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமலும், கரும்பு அரவைக்கு அனுப்பிய விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்கப்படாமலும் உள்ளது. இதற்கிடையே அமைச்சரவை கூட்டத்தில் சர்க்கரை ஆலையை தனியாரிடம் ஒப்படைக்கலாமா? என கேட்கப்பட்டது. இதற்கு கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலை ஊழியர்கள், அரசியல் கட்சியினர், விவசாய சங்கங்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சர்க்கரை ஆலையை அரசே நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுவை சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கந்தசாமி தலைமையில் சர்க்கரை ஆலையை நிலை குறித்து ஆலையை சேர்ந்த விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்களுடன் நேற்று மாலை ஆலோசனை நடந்தது.
கூட்டத்தில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், டி.பி.ஆர்.செல்வம், வையாபுரி மணிகண்டன், அரசு செயலர் சுந்தரவடிவேலு, கூட்டுறவு பதிவாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள், விவசாய சங்க நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் விவசாயிகள் தங்களின் நிலுவைத்தொகை உடனடியாக தரவேண்டும், கரும்பு அறுவடைக்கு தயாராக இருப்பதால் அரவைப்பணியை விரைந்து தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். மேலும் சர்க்கரை ஆலை நஷ்டத்தில் இயங்குவதற்கு விவசாயிகள் காரணமில்லை எனவும், அரசு அதிகாரிகள் தான் காரணம் எனவும் குற்றம்சாட்டினார்கள். மேலும் அவர்கள், சர்க்கரை ஆலை ஒன்று மட்டும் தான் உள்ளது. அதனை அரசு தான் ஏற்று நடத்த வேண்டும். அதனை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் கந்தசாமி கூறுகையில், ‘புதுவை அரசின் நிதி நிலைக்குறித்து விளக்கினார். விவசாயிகளின் நிலுவையை தொகை வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும். மேலும் சர்க்கரை ஆலை விவகாரத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் தரப்பில் இருந்து குழு அமைக்கப்பட்டு, அதன் மூலமாக தீர்வு காணலாம். அடுத்து வரும் புதன்கிழமையில் ( 13–ந் தேதி) நிரந்தர தீர்வு காணப்படும்’ என்றார்.