காங்கிரசாரை போல் மற்ற கட்சியினர் தியாகம் செய்ததில்லை; அமைச்சர் நமச்சிவாயம்
இந்திய நாட்டுக்காக காங்கிரஸ் கட்சியினரைப்போல் மற்ற கட்சியினர் தியாகம் செய்தது இல்லை என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி,
புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–
அம்பேத்கர் உருவாக்கிய சட்டம் எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது. அதில் அவ்வப்போது நாம் சிறிது மாற்றங்களை செய்து கொள்கிறோம். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு புதிதாக மக்களுக்கு எதையும் செய்யவில்லை. கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றி செயல்படுத்துகிறார்கள்.
நாட்டில் பல வளர்ச்சி திட்டங்களை உருவாக்கியது காங்கிரஸ் ஆட்சிதான். காங்கிரசை தவிர வேறு கட்சிகள் இந்தியாவை உயர்த்தியது கிடையாது. நாட்டுக்காக ரத்தம் சிந்தியவர்கள் காங்கிரசார்தான். வேறு எந்த கட்சியினரும் அவர்களைப்போல் தியாகம் செய்தது கிடையாது.
மாற்றுக் கட்சியினர் தொடர்ந்து இந்தியாவை ஆட்சி செய்ய முடியாது. அவர்களது வேஷம் களையப்படும். அவர்களால் நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாது. சாதி, மதத்தின் பெயரால் அவர்கள் நாட்டை துண்டாடுகிறார்கள். ராகுல்காந்தியை பிரதமராக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டிய கடமை உள்ளது.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, முன்னாள் முதல்–அமைச்சர் ராமச்சந்திரன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம், துணைத்தலைவர்கள் நீல.கங்காதரன், தேவதாஸ், மற்றும் நிர்வாகிகள் வீரமுத்து, தனுசு, சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.