தி.மு.க. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வீடு மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 4 பெண்கள் உள்பட 11 பேர் கைது
கூடுவாஞ்சேரி அருகே, தி.மு.க. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வீடு மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் தர்காஸ் பகுதியை சேர்ந்தவர் கே.எஸ்.ரவி (வயது 48). இவர் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தி.மு.க துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். பெருமாட்டுநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து உள்ளார்.
கடந்த 4-ந் தேதி மாலை இவரது வீட்டுக்கு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ‘வீட்டில் ரவி இல்லையா?’ என்று கேட்டுவிட்டு, தங்கள் கையில் மறைத்து வைத்திருந்த 3 நாட்டு வெடிகுண்டுகளை ரவி வீட்டின் மீது சரமாரியாக வீசியது.
காலில் காயம்
சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ள அவரது அண்ணன் கே.எஸ்.குமார் வெளியே வந்து பார்த்தபோது ஒரு நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் அவரது காலில் சிறிய காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரின் அண்ணன் கே.எஸ்.ரவி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேர் கொண்ட கும்பலை தேடி வந்தனர்.
11 பேர் கைது
இந்தநிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த சுதாகர் (34), நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் (43), தாம்பரம் சேலையூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (32), தன்சிங் (55), கண்ணன் (45), காவாங்கரை பகுதியை சேர்ந்த விக்னேஷ் (23), விமல்குமார் (25), நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி (28), கஜலட்சுமி (30), பானு (37), கீதா (23), 4 பெண்கள் உள்பட 11 பேரை கூடுவாஞ்சேரி போலீசார் நேற்று கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
11 பேரையும் நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.